பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நேற்று முன்தினம் இரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தாலும், எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கவில்லை. ஒக்கியம் மடுவு பகுதியில் ஏற்கனவே கடந்த மாதம் ஆய்வு செய்தோம். ஆகாயத்தாமரையை அகற்றினோம். அதனால் பெரிய அளவில் தண்ணீர் தேங்காமல் இருந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெள்ளநீர் வெளியேறி, இந்த ஒக்கியம் மடுவு வழியாகத்தான், பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று, பின்னர் அங்கிருந்து கடலில் கலக்கிறது. ஆனால், இங்கு ஏற்கனவே இருக்கும் நீர்வழித் தடத்தின் அகலம் மாறுபட்ட அளவுகளில் இருந்து வந்தது. தண்ணீர் வெளியேறுகிற பாதை குறுகலாக இருந்ததால், வெள்ளநீர் தடையின்றி வெளியேற முடியாத ஒரு சூழல் இருந்தது. அப்படி வெளியேற முடியாத வெள்ளநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழும் ஆபத்து இருந்தது.
நீர்வளத்துறையினர் இங்கு ஆய்வு செய்தார்கள். அப்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து ஒக்கியம் மடுவுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடமானது, வெள்ளநீர் வெளியேறுவதற்கு தடங்கலாக இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது, அனைத்து சட்ட வழிமுறைகளையும் பின்பற்றி சம்பந்தப்பட்ட அந்த தனியார் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. கையகப்படுத்தப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட இடத்தினை தற்போது, அகலப்படுத்தி வருகின்றோம். ஏற்கனவே, 80 மீட்டர் அகலம் இருந்த அந்த இடத்தில், நீர் தேங்காமல் உடனுக்குடன் வடிகின்ற வகையில், 130 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. இப்பணிகள் நிறைவுற்றால், 7 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் வெளியேறிய நிலையில் இருந்து, தற்போது 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் தற்காலிக பணியாக அருகிலுள்ள இன்னொரு தனியார் கல்லூரி எதிரே உள்ள மணல் திட்டுகளை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 5 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சீரமைக்கும் பணி, மாநகராட்சி நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர்கள் மதியழகன், எஸ்.வி.ரவிச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தனியார் கல்லூரிகளின் அருகில் ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை கரைகளை அகலப்படுத்தும் பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.