வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய காரில் குட்கா கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக அதன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பராமரிப்பு பணிக்காக ஒரு வழிப்பாதையாக மாற்றி பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு இப்பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார், அங்கிருந்த தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த காரில் வந்த டிரைவர், இறங்கி தப்பி ஓடினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சந்தேகமடைந்து விரட்டிச்சென்று அவரை பிடித்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய சொகுசு காரை சோதனை செய்தபோது அதில் சிறுசிறு மூட்டைகள் கிடந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது சுமார் 350 கிலோ எடை கொண்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது.இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கார் டிரைவர் நர்சர்ராம் (33) என்பதும் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தியதும், கார் விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து நர்சர்ராமை கைது செய்தனர். மேலும் குட்கா மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இந்த போதை பொருட்கள் கடத்தலில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா, தமிழகத்தில் எந்த இடத்திற்கு இவை கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
The post வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய காரில் குட்கா கடத்தியது அம்பலம் appeared first on Dinakaran.