கெங்கவல்லி, நவ.13: வீரகனூர் அருகே லத்துவாடி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் மகேஸ்வரி(19). இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு நர்சிங் படித்து வருகிறார். தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து கடந்த 3ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில், 4ம்தேதி கல்லூரியில் இருந்து மகேஸ்வரியின் பெற்றோருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில், மாணவி விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வராதது குறித்து தகவல் கேட்டுள்ளனர். அப்போது தான் மாணவி கல்லூரிக்கு செல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து, லட்சுமணன் உறவினர் வீடுகள் மற்றும் கல்லூரி தோழிகளிடம் விசாரித்தும் மகேஸ்வரி பற்றி விபரம் கிடைக்காததால், வீரகனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரஜினியிடம் புகாரளித்தார். புகாரின்பேரில் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் மகேஸ்வரி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சேலம் சென்று மாணவியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், பெற்றோர் திட்டியதால் கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றதாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரஜினி, மாணவியின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி மகேஸ்வரியை அனுப்பி வைத்தார்.
The post மாயமான நர்சிங் மாணவி மீட்பு appeared first on Dinakaran.