சேலம், மார்ச் 1: ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிந்த இடத்தில் தடுப்பு சுவர் கட்டாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்விடத்தில் ஒருவித அச்சத்துடன் சுற்றுலா பயணிகள், வாகனங்களில் சென்று வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு ஏரி-படகு சவாரி, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து
மகிழ்கின்றனர்.
இந்த ஏற்காட்டிற்கு சேலத்தில் இருந்து செல்ல மலை அடிவாரத்தில் இருந்து 21 கி.மீ., தூரத்திற்கு மலைப்பாதை உள்ளது. இப்பாதையை நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. மழைக்காலங்களில் இந்த மலைப்பாதையில், மண் சரிவு ஏற்படுவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக உள்ளது. அப்படி மண் சரியும் இடங்களில் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மணல் மூட்டைகளை அடுக்கி, பாதையை சரி செய்கின்றனர். அடுத்த சில நாட்களில், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு சுவர் கட்டுமான பணியை மேற்கொள்கின்றனர். இந்தவகையில் சமீபத்தில் பெய்த கோடை மழையின் போது, 1வது கொண்டை ஊசி வளைவிற்கும், 2வது கொண்டை ஊசி வளைவிற்கும் இடைப்பட்ட பகுதியில், அதாவது அடிவாரத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் சுமார் 20 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் இடிந்து மண் சரிந்துள்ளது.
அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர், மணல் மூட்டைகளை அடுக்கி, பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும் இன்னும் அவ்விடத்தில் கட்டுமான பணி மேற்கொண்டு, புதிய தடுப்பு சுவரை ஏற்படுத்தவில்லை. இதன்காரணமாக அந்த இடத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மலைப்பாதையில் பைக், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், அவ்விடத்தில் ஒருவித அச்ச உணர்வோடு செல்கின்றனர். இதனால், மிக விரைந்து மண் சரிந்த இடத்தில் தடுப்பு சுவரை கட்டிட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மண் சரிந்த இடத்தில் தடுப்பு சுவர் கட்டாததால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.