அரியலூர், நவ. 10: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், மின்சார பாதுகாப்பு மற்றும் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார்.
அரியலூர் மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் ஈர கைகளுடன் மின்சார சுவிட்சுகளை தொடக் கூடாது. பழுதடைந்த மின் சாதனங்கள், மின்சார சுவிட்சுகள், விளக்குகள் ஆகியவற்றை தங்களது பெற்றோரிடம் கூறி புதிதாக மாற்ற வேண்டும். அறுந்து கிடக்கும் மின்சார கம்பிகளுக்கு அருகில் செல்லக்கூடாது . அவ்வாறு தென்படின் உடனடியாக மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் தங்கள் பெற்றோர்களிடம் கூறி மின்சார கம்பிகளில் துணிகளை காய வைப்பது, ஆடு மாடுகளை கட்டுவது போன்ற தவறான செயல்களை செய்யக்கூடாது கூற வேண்டும்.
மின்சார கம்பிகளுக்கு அடியில் தீயிட்டு கொளுத்துவ தை தவிர்க்க வேண்டும்.மின்சாரத்தை முறையாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு அடிமை போல் செயல்படும் .அதை தவறுதலாக பயன்படுத்தினால் அது எமானாக மாறி நம் உயிரை பறித்து விடும். பகல் நேரங்களில் தேவையில்லாத போது மின்சார விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவற்றை அணைத்து வைக்க வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் மின்சார உற்பத்திக்கு உதவி புரிய முடியும். வீட்டிற்கும் மிகுந்த நன்மை பயக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டார். முன்னதாக பள்ளியின் ஆற்றல் மன்ற பொறுப்பாளர் செந்தில்குமரன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் செந்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.
The post அறுந்து கிடக்கும் மின் கம்பிகளுக்கு அருகில் செல்லக்கூடாது appeared first on Dinakaran.