பெரம்பலூர், டிச. 20: குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலைகல்லூரியில் குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அருகே குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ,மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று இந்திய மாணவர் சங்கம் அமைப்பின் தலைமையில் திரண்டனர்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்காமுன்பு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கல்லூரி மாணவ,மாணவியருக்கு சுத்தமான குடிநீர் வசதியை செய்துதரவேண்டும். சுகாதாரமான கழிப்பிடம் வேண்டும். குண்டும் குழியுமாக, மேடு பள்ளமாக கேட்பாரற்றுக் கிடக்கும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும். பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டு, திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகத்தில் ஊதியம் பெறும் கௌரவ விரிவுரையாளர்கள்,
மணிநேர விரிவுரையாளர்கள், மற்றும் அலுவலகப் பணியாளர்க ளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை, கால தாமதமின்றி விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுதொடர்பான கோரிக்கை மனுவினை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்காக மாணவ- மாணவியர் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, பெரம்பலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
The post அடிப்படைவசதிகளை நிறைவேற்றக்கோரி அரசு கலைகல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.