ஏலச்சீட்டு நடத்தி ரூ40 லட்சம் அபேஸ்: பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதம்

திருவள்ளூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ40 லட்சம் வரை ஏமாற்றிய விவகாரத்தில் விசாரணைக்கு வந்தவர் எஸ்பி அலுவலகத்தில் இருந்து திடீரென வெளியேறியதால் பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அருகே பெரியார் நகர் ராஜாஜிபுரம் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரிடம் பெரியகுப்பம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனக்குத் தெரிந்த 10 பேரிடமிருந்து தலா ரூ15 ஆயிரம் வீதம் மாதந்தோறும் ரூ1.50 லட்சம் வாங்கி 20 மாதங்கள் ஏலச்சீட்டு நடத்தி வந்த ஹரிஹரனிடம் பணம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் சீட்டு முடிந்தும் பணம் கட்டியவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஹரிஹரன் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றப்பட்ட நபர்களுடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் ஒரு 1 மணியளவில் ஹரிஹரன் மற்றும் ராஜேஸ்வரி என இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விசாரணையில் இருந்து ஹரிஹரன் வெளியேறியதால் ஆத்திரமடைந்த பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போரட்டம் நடத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், விசாரணையில் இருக்கும்போது வெளியேறியதை காவல் துறையினர் தடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். அவரிடம் இருந்து உடனடியாக பணத்தை பெற்று தர வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் நாங்கள் அலுவலகத்தைவிட்டு வெளியேற மாட்டோம் என பெண்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஹரிஹரனை பிடித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் எஸ்பி அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

The post ஏலச்சீட்டு நடத்தி ரூ40 லட்சம் அபேஸ்: பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: