மாவட்டத்துக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் காக்களூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர்: மாவட்டத்துக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் காக்களூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்றும், படகு சவாரிக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களின் சுற்றுலாத் தலமாக இருப்பது சென்னை மெரினா கடற்கரைதான். வசதி படைத்தவர்கள் கோல்டன் பீச் உள்பட பல்வேறு விளையாட்டுத் திடல்களுக்கு செல்கின்றனர். ஆனால் திருவள்ளூர் மாவட்டத் தலைநகரில் உள்ள காக்களூர் ஏரியை சுற்றுலாத் தலமாக அறிவித்து, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கு அதிகமானோர் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில், காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இது 194 ஏக்கரில், 2682 மீட்டர் நீளம் வரையிலான 4 மதகுகள், 2 கலங்கள்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும்.

இதனால் கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டும் வந்தது. இந்நிலையில் காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்பு, மாடிவீடு, ஓட்டுவீடு, குடிசை வீடு என 195 வீடுகள் கட்டியிருப்பதால் கடந்த 2018ல் வீட்டை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வருவாய்த்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டநிலையிலும் அது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஏரியை சுற்றுலாத்தலமாக்கும் வகையில் இந்த பகுதியை தூய்மையாக்கி பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு இடமாகவும், நடைபாதை அமைத்து ஏரியில் படகு போக்குவரத்து ஏற்படுத்தவும் வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த 2013ல், காக்களூர் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இந்த பணிகளை அப்போதைய சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி நிர்வாகம் மற்றும் காக்களூர் ஊராட்சி நிர்வாகம் இணைந்து நமக்குநாமே திட்டம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ30 லட்சம் திரட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மூலம் ரூ60 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாகனங்கள் செல்லும் சாலையோரம் 4 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை அமைக்கவும், படகு தளம் மற்றும் ஏரியின் மையப் பகுதியில் படகில் இருந்து இறங்கி, பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் மேட்டுப்பகுதி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனைத்துப் பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சுற்றுலா என்றால் சென்னை மெரினா கடற்கரைக்கும், படகு சவாரி என்றால் சென்னை முட்டுக்காடு பகுதிக்கும் செல்லவேண்டியிருக்கிறது.

எனவே திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் உள்ள காக்களூர் ஏரியை தூர் வாரி, அடர்ந்து வளர்ந்துள்ள அல்லி செடிகள், பாளை செடிகள், வேலிக்காத்தான் முள்செடிகள் ஆகியவற்றை அகற்றிவிட்டு ஏரியை சுற்றி நடைபாதையை சீர் செய்து படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் ஊராட்சி நிர்வாகத்திற்கு நிரந்தர வருமானத்திற்கு வழி கிடைக்கும். அதனால் ஊராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகளும் எளிதில் நிறைவேறும். எனவே காக்களூர் ஏரியை சுற்றுலாத் தலமாகவும், படகு சவாரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, முன்னாள் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post மாவட்டத்துக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் காக்களூர் ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: