திமுக ஆட்சியின் முத்தான திட்டங்களால் வளர்ச்சி பாதையில் திருவண்ணாமலை மாவட்டம்: கல்வி, பொருளாதாரம் தொழில் வளம் உயர்ந்தது

திருக்குவளையில் உதித்த கலைஞர் எனும் அரசியல் சூரியன், வாழ்நாள் முழுதும் உலக தமிழர்களின் வாழ்வில் இருள் நீங்க பிரகாசித்தது. அரசியல், எழுத்து, கலை, இலக்கியம், சமூகம் என அவர் உச்சம் தொட்ட துறைகள் மூலம் இந்த மண்ணும் மக்களுமே பயன்பெற்றனர். ஏழைகளின் வலியுணர்ந்தவர், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் நீங்கிட இறுதி மூச்சுவரை போராடியவர். சாதி, மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் மலர்ந்திட அயராது பாடுபட்டவர். அவரது ஆட்சி காலங்களில், தமிழ்நாடு அடைந்த ஏற்றங்களும், மாற்றங்களும் ஏராளம். இடையிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எனும் இருள்சூழ்ந்தாலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து, இருளகற்றியது உதயசூரியன். திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு வளம் பெற்றதென்றால், வேளாண்மையை மட்டுமே நம்பி இருந்த திருவண்ணாமலை மாவட்டம் வளத்திலும் வளம் பெற்றது.
திருவண்ணாமலை எனும் திருநகரை மாவட்ட தலைநகராக மாற்றியதோடு, இம்மாவட்டத்தின் ஆகச்சிறந்த வளர்ச்சிகளுக்கு அடித்தளம் இட்டதும், அவரது பொற்கால ஆட்சிதான் என்பதற்கு ஆயிரமாயிரம் சான்றுகள் குவிந்திருக்கின்றன. கலைஞரின் ஆற்றலை தன்னகத்தே பெற்று அவரது வழியில் மொழியை, இனத்தை, மாநில உரிமையை, மக்களை நலனை காப்பதில் செயல்வீரராக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனித்துவம் மிக்க தலைவராக நாடே வியக்கும் வகையில் செயலாற்றி வருகிறார். அவரது பொற்கால ஆட்சியில், திருவண்ணாமலை மாவட்டம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வளம் பெறுகிறது.

வடாற்காடு மாவட்டத்தின் தலைநகராக இருந்த வேலூருக்கு, சுமார் நூறு கி.மீட்டருக்கு அதிகமான தொலைவு பயணிக்க வேண்டிய நெருக்கடியில் தவித்த திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு, திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை கடந்த 1989ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உருவாக்கி கொடுத்தது திமுக ஆட்சி அதன் பிறகு, திருவண்ணாமலை மாவட்டம் கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில் வளத்திலும் ஏற்றம் பெற்றது. எழில்மிகு புதிய கலெக்டர் அலுவலகம், புதிய எஸ்பி அலுவலகம் கட்டுவதற்காக அரசாணை, திருவண்ணாமலையில் தமிழகத்தின் 2வது உழவர் சந்தை அதன் தொடர்ச்சியாக, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செங்கம், திருவண்ணாமலை தேனிமலை, கீழ்பென்னாத்தூர் என மொத்தம் 8 உழவர் சந்தைகள் இந்த மாவட்டத்தில் உருவானது. சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் கலைஞரின் கனவு திட்டம் சமத்துவபுரம். திருவண்ணாமலை மாவட்டத்தின் முதல் சமத்துவரத்தை கீழ்பென்னாத்தூர்.

அடுத்த மேக்களூர் கிராமத்தில், கடந்த 1998ம் ஆண்டு கருணாநிதி திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி காலம் வரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 இடங்களில்அடுத்த மேக்களூர் கிராமத்தில், கடந்த 1998ம் ஆண்டு கருணாநிதி திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி காலம் வரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 இடங்களில் சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டன. திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை புதிய மண்டலம் திமுக ஆட்சியில் கடந்த 2009ம் ஆண்டு உதயமானது. மருத்துவ வசதியில் பின்தங்கியிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தின் நீண்ட கால கனவு திட்டம் அரசு மருத்துவக் கல்லூரி. சிறு விபத்து காயங்களுக்கும், வேலூர், புதுச்சேரி, சென்னை என அலைந்த இம்மாவட்டத்து மக்களின் துயர் தீர்க்க, ₹120 கோடி செலவில், 600 படுக்கை வசதிகளுடன் கூடிய திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைஞர் அறிவித்தார்.

அதற்கான நிதியையும் ஒதுக்கி, அரசாணை வெளியிட்டார். அதேபோல், 30 படுக்கை வசதி கொண்ட தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், திமு ஆட்சி காலத்தில் மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் தொடங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் உருவாகி, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் இல்லாத நிலை இருந்தது. கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், ₹16 கோடி செலவில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் உருவாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல், ₹7 கோடி செலவில் ஆரணியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சிக்கு ₹36 கோடியில் 3வது கூட்டுக் குடிநீர் திட்டம் திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்மூலம், திருவண்ணாமலை நகர மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டது. திராவிட மாடல்ஸ் ஆட்சியில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திட உழைத்து வரும் முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆகியோர் ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தி வருகின்றனர். அதனால், கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில், திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பிரதான அனைத்து சாலைகளும் தரம் உயர்ந்துள்ளன. திருவண்ணாமலை கிரிவலப் பாதை மேம்பாடு, மாடவீதி சர்வதேச தரத்தில் கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலங்கள், புதிய அரசு அலுவலகங்கள் என எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

The post திமுக ஆட்சியின் முத்தான திட்டங்களால் வளர்ச்சி பாதையில் திருவண்ணாமலை மாவட்டம்: கல்வி, பொருளாதாரம் தொழில் வளம் உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: