மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில் பங்காரு அடிகளார் உருவ சிலைக்கு குடமுழுக்கு


மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள குருபீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் சிலை பிரதிஷ்டை மற்றும் திருகுடமுழுக்கு விழா கடந்த 4 தினங்களாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த 16ம் தேதி ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அன்று மாலை 4 மணியளவில் ஆதார பீடம் நிறுவுதல், இரவு 7 மணியளவில் கோபுர கலசம் நிறுவுதல் நிகழ்ச்சி நடந்தது. 17ம் தேதி ஆதிபராசக்தி கருவறை அருகில் உள்ள குரு பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அன்று மாலை முதல் கால வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். 18ம் தேதி காலை 2வது கால வேள்வி பூஜையும், மாலை 3வது கால வேள்வி பூஜையும் நடந்தது. இன்று காலை ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள குரு பீடத்திற்கு குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். குருபீடத்தில் உள்ள பங்காரு அடிகளாரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மகா தீபாராதனை செய்தார். நிகழ்ச்சியில், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், தேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஊராட்சி தலைவர் அகத்தியன், கல்வி குழுமங்களின் தாளாளர்கள் ஆஷா அன்பழகன், லேகா செந்தில்குமார், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் ரமேஷ் மற்றும் ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். அனைத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் கரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்ட பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில் பங்காரு அடிகளார் உருவ சிலைக்கு குடமுழுக்கு appeared first on Dinakaran.

Related Stories: