மணல் குவாரி முறைகேடு வழக்கு நீர்வளத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்: அமலாக்கத்துறை முடிவு

சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளம், கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு வழக்கு சூடு பிடித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12 ம் தேதி ஒரே நாளில் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக சில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதன்படி, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகினர்.கூடவே, அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, அமலாக்கத்துறை சம்மனுக்கு 5 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, நேற்று முன் தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் ஆவணங்களுடன் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர்களிடம் சுமார் 10 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். விசாரணையின் போது முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் தாங்கள் ஆட்சியராக இல்லை என மூன்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அப்போது மணல் குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், தற்போது மணல் குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. மேலும் மணல் அள்ளப்படுவது தொடர்பாக தங்களின் பணி குறைந்த அளவு தான் எனவும் நீர்வளத் துறை மற்றும் கனிமவளத்துறைக்கே அதிக பணி இருப்பதாக விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் 5 மாவட்டங்களிலும் பணியாற்றிய நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் பட்டியலை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பட்டியலின் இடம்பெற்றுள்ள இரு துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post மணல் குவாரி முறைகேடு வழக்கு நீர்வளத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்: அமலாக்கத்துறை முடிவு appeared first on Dinakaran.

Related Stories: