பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு உள்பட 20 வகை ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை கட்டணம் மாற்றம்: பதிவுத்துறை உத்தரவு

சென்னை: பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு போன்ற 20 வகையான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை கட்டணத்தை மாற்றியமைத்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2001ம் ஆண்டு முதல் முத்திரைத் தீர்வை கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது சட்டப்பேரவை அறிவிப்புக்கு இணங்க 20 வகையான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு கடந்த மே 3ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தத்தெடுத்தலுக்கு ரூ.100 ஆக இருந்த முத்திரைக் கட்டணம் ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சங்கப் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்து ஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்றும், பத்திரம் ரத்துக்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூ.20 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூ.20 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சங்கத்துக்கான ஒப்பந்தப் பதிவுக்கு ரூ.200 அல்லது ரூ.500 என இருந்த கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொரு பாகத்துக்குமான சந்தை மதிப்பில் 4 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாகப்பிரிவினை செய்யும்போது, அதில் ஒருவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரது சட்டப்படியான வாரிசுகள், முன்பு குடும்பத்தினர் அல்லாதவராக கருதப்படுவர். ஆனால், தற்போது புதிய திருத்தத்தில், அந்த சட்டப்படியான வாரிசுகளும் குடும்ப அங்கத்தினராக கொண்டு வரப்பட்டுள்ளனர். அதேபோல, பங்குதாரர் பதிவுக்கான கட்டணமும் ரூ.300ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது அதிகாரப் பத்திரத்தில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை ஒரே பதிவில் வாங்குவதற்காக வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரம், ஒரு நபர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பதிவுக்கு மட்டும் வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரத்துக்கு ரூ.5 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. 5 நபர்களுக்கு இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ செயல்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் பொது அதிகாரப் பத்திரத்துக்கு முன்பு ரூ.100 முத்திரைக் கட்டணம், இப்போது ரூ.1000 ஆகவும், 5க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு ரூ.175லிருந்து ரூ.1000 ஆகவும் முத்திரைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அசையா சொத்துக்கள் விற்பனைக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு சொத்தின் சந்தைமதிப்பில் 4 சதவீதம் என முத்திரைக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அசையா சொத்து விற்பனைக்காக குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு முத்திரைக் கட்டணம் ரூ.1000, குடும்பத்தினர் அல்லாதவராக இருந்தால் சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொத்து அடமானத்தை திரும்ப பெறுவதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.80லிருந்து ரூ.1000, பிணை பத்திரத்துக்கு ரூ.80லிருந்து ரூ.500, செட்டில்மென்ட் திரும்ப பெறுவதற்கு ரூ.80லிருந்து ரூ.1000, குத்தகையை ஒப்படைப்பதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.40 லிருந்து ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் ஒரு அறங்காவலரிடம் இருந்து மற்றொரு அறங்காவலர் அல்லது அதே அறக்கட்டளையின் ஒரு பயனாளருக்கு உரிமை மாற்றம் செய்ய ரூ.30 லிருந்து ரூ.1000 ஆகவும், அறக்கட்டளை உருவாக்கத்துக்கு ரூ.180 ஆக இருந்த முத்திரைக் கட்டணம் ரூ.1000ஆகவும், அறக்கட்டளை கலைத்தலுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.120 லிருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: முத்திரைத் தீர்வை கட்டணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டவை, அதனால்தான் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த சட்டத் திருத்தம் முத்திரைக் கட்டணத்தை உயர்த்துவதற்காக மட்டுமல்ல, சில பரிவர்த்தனைகள், பதிவு செய்யும் செயல்முறைகளை எளிதாக்குவதற்காகவும் செய்யப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால் அதிகபட்சம், ரூ.50 கோடி வரை வருவாய் கிடைக்கும். முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுகள் மூலம், 2023-24ம் ஆண்டில் சுமார் ரூ.19,000 கோடி வருமானம் இருந்தது, இதில் கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பங்கு முத்திரைத் தீர்வையின் மூலம் வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு உள்பட 20 வகை ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை கட்டணம் மாற்றம்: பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: