நேர்காணல் எடுப்பவரையும் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: யுடியூப்களில் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கத் தூண்டும் வகையில் நேர்காணல் எடுப்பவர்களையும் முதல் எதிரியாகச் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் சவுக்கு மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, குண்டர் சட்டத்தில் அடைக்க தடை விதிக்கக்கோரி மூன்றாவது நபர் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும். ஒருவேளை அவ்வாறு உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். யூகங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யுடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு, காவல்துறையினர் தன்னையும் கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். அப்போது, போலீஸ் பதில் மனு தாக்கல் செய்யும்வரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பெலிக்ஸ் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். விசாரணையின்போது யுடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கு இதுதான் தகுந்த நேரமாகும். நேர்காணல் அளிக்க வருபவர்கள், அவதூறான கருத்துகளைத் தெரிவிக்கத் தூண்டும் வகையில் நேர்காணல் செய்பவர்களையும் முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

The post நேர்காணல் எடுப்பவரையும் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: