மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு: ஆர்டிஐ தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்ய வில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. சென்னையில் மாதவரம் பால் பண்ணை- சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை – சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் சுமார் ரூ.63,246 கோடி செலவில், 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2018ம் ஆண்டு முதல் இத்திட்டத்திற்கான ஒன்றிய அரசின் பங்காக ரூ.3,273 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மற்ற மாநிலக்ஙளில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியுடன் ஒப்பிடும்போது இதுவரை வெறும் 5 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது பற்றி ஆர்.டி.ஐ. மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது. அதன்படி, 2021ம் ஆண்டு ஆகஸ்டு 17ம் தேதி பொது முதலீட்டு வாரியத்தால் பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்து 3 ஆண்டுகளாகியும் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.
இந்த திட்டத்திற்காக ஒப்புதலை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக பிரதமரிடம் வலியுறுத்தி வரும் நிலையில், மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கான முன்மொழிவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது.

இதனிடையே மெட்ரோ ரயில் திட்டம் மாநில, ஒன்றிய 50-50 நிதிப் பங்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஒன்றிய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் கிடைக்காத நிலையில் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் திட்டம் முடியவுள்ள நிலையில் இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால், இந்த திட்டத்தை, ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் மாநில நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு செலவினங்களை மேற்கொண்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை.

இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு மொத்தம் 7 முறை கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 3 ஆண்டுகளாகியும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும், நிதி ஒதுக்கவும் ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் முக்கியத்துவம் கருதி 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.10,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின் கடைசி இரு ஆண்டுகளில் முறையே ரூ.3100 கோடி, ரூ.2681 கோடி என மொத்தம் ரூ.15,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், 2024 மற்றும் 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றாலும் மாநில அரசின் நிதியில் இருந்து செலவிடப்பட்டு வருகிறது. முழுமையான நிதி கிடைக்காத பட்சத்தில், பணிகள் முடங்கும் ஆபத்து உள்ளது.

The post மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு: ஆர்டிஐ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: