இந்திய அளவில் 576வது இடம் பிடித்து சாதனை; டீக்கடைக்காரர் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி: ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தால் பயன்

நெல்லை: டீக்கடைக்காரர் மகன், தமிழக முதல்வரின் ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் பயனால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேல்முக மறக்குடி தெருவில் வசிப்பவர் வேல்முருகன்.டீக்கடை நடத்தி வருகிறார். இதற்கு முன்பு கோவில்பட்டியில் தனியார் மில்லில் வேலை பார்த்துள்ளார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பேச்சி, ஆதிமூலம் என 2 மகன்கள். மூத்த மகன் பேச்சி (26), கடந்த ஏப்.16ம் தேதி வெளியான யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 576வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் 1 முதல் பிளஸ்2 வரை கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018ல் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு எந்த பயிற்சி வகுப்புகளிலும் சேராமல் சென்னையில் தங்கி நண்பர்களுடன் சேர்ந்து படித்து வந்தார். 4 முறை தேர்வெழுதி வெற்றி கிடைக்காத போதிலும், கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வை 5வது முறையாக எழுதி 576வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஏழ்மை நிலையிலும் தந்தை வேல்முருகன் டீக்கடை நடத்தியும், தாயார் லட்சுமி பீடி சுற்றியும் தனது மகன்களை படிக்க வைத்தனர். மகனின் கலெக்டர் கனவை நனவாக்க சொந்த வீட்டை விற்று படிக்க வைத்துள்ளனர். பேச்சியின் சகோதரர் ஆதிமூலம் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதுகுறித்து பேச்சி கூறுகையில், இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தில் எனக்கு ரூ25 ஆயிரம் நிதி வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, என்றார்.

The post இந்திய அளவில் 576வது இடம் பிடித்து சாதனை; டீக்கடைக்காரர் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி: ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தால் பயன் appeared first on Dinakaran.

Related Stories: