சிவகங்கை அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழாவில் ஆடுகளை வெட்டி அறுசுவை விருந்து: 6 ஆயிரம் பேர் பங்கேற்பு


சிவகங்கை: சிவகங்கை அருகே மடைகருப்பசாமி கோயிலில் நடந்த விநோத திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று 280 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை அருகே திருமலை கோனேரிப்பட்டி ஊராட்சியில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அருகே மடைகருப்பசாமி கோயில் 300 ஆண்டு பழமை வாய்ந்தது. இங்கு ஆண்கள் மட்டுமே சித்திரை முதல் தேதி காப்பு கட்டி விரதம் மேற்கொள்வர். 16ம் நாளான நேற்று முன்தினம் மாலை திருமலையிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக கோயிலுக்கு புறப்பட்டனர். நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய அரிவாள், மணி, கருப்பு நிற வெள்ளாடுகளுடன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மலை கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தம் எடுத்து ஒரு மண் பானையில் பொங்கலிட்டனர்.

தொடர்ந்து நள்ளிரவில் 280 ஆடுகளை வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பச்சரிசி சாதம் சமைக்கப்பட்டது. பொங்கல், சமைத்த இறைச்சி, ஆடுகளின் தலைகளை சுவாமி முன் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நேற்று அதிகாலை ஒரு மணியளவில் பல்லியின் அசரீரி கேட்டதும் ஆண்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. தொடர்ந்து அதிகாலை வரை விருந்து நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை, காரைக்குடி, திருப்புத்தூர், சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். பலியிட்ட 280 ஆடுகளின் தலைகள் விழாவிற்கு வந்திருந்த ஒரு பிரிவினரிடம் வழங்கப்பட்டன.

The post சிவகங்கை அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழாவில் ஆடுகளை வெட்டி அறுசுவை விருந்து: 6 ஆயிரம் பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: