பயன்பாட்டுக்கு வராமலேயே காலாவதியாகும் உப்பனாறு மேம்பாலம்

* 15 ஆண்டுகளாகியும் பணிகள் முடிந்தபாடில்லை

* நகரில் நெரிசலுக்கு விடிவுகாலம் எப்போது?

புதுச்சேரி : புதுச்சேரியில் 15 ஆண்டுக்கு முன்பு துவங்கிய உப்பனாறு மேம்பால பணிகள் இதுவரை முழுமையடையாத நிலையில் பயன்பாட்டுக்கு வராமலே மேம்பாலம் காலாவதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலையில் இதற்கான விடிவு காலம் எப்போது? என்ற வினாவையும் பொதுமக்கள் எழுப்பி உள்ளனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஓரளவுக்கு குறைக்க உப்பனாற்றின் மீது மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டது. ஜீவா நகரில் ஆரம்பிக்கும் உப்பனாறு வாணரப்பேட்டை, உப்பளம் வழியாக கடலில் கலக்கிறது. காமராஜர் சாலை (பாலாஜி தியேட்டர் அருகில்) மற்றும் மறைமலையடிகள் சாலை இடையே உப்பனாறு வாய்க்கால் மீது ரூ.35 கோடியில் பாலம் அமைக்க 2008ல் திட்டமிடப்பட்டது. 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்துடன் இருவழிச்சாலையாகவும், பாலத்தின் இருபுறமும் 1.5 மீட்டர் நடைபாதையுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பாலத்தை தாங்கும் பைல் பவுண்டேசன் மட்டும் ரூ.3.5 கோடியில் அமைக்கப்பட்டு, பணி முடிவடையாமலே நிதி இல்லாமல் நின்று போனது.

அதன்பிறகு 2016ல் என்ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது ஹட்கோ நிதியுதவி மூலம் ரூ.37 கோடியில் கடன் பெற்று பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது. இதில் ரூ.7.15 கோடி மாநில
அரசின் பங்குதொகை. மழைக்காலத்தின் போது, உப்பனாறு வாய்க்கால் ஓரம் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள், உப்பனாறு கழிவுநீர் உட்புகுவதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாலப்பணி நிறுத்தப்பட்டது. கோடை காலத்தில் மட்டுமே பணிகள் நடைபெற்றன. இடையிடையே மட்டும் பாலம் கட்டுமான பணி நடந்ததால் தொய்வு ஏற்பட்டது. காமராஜர் சாலை மற்றும் மறைமலையடிகள் சாலையை இணைப்பது மட்டுமே எஞ்சியுள்ளது.

50 மீட்டர் மட்டுமே பாலம் கட்ட வேண்டியுள்ளது. 85 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் 2019ல் மீண்டும் நிறுத்தப்பட்டு விட்டது. அரசின் பங்கு தொகையில் ரூ.1.15 கோடி மட்டுமே, கட்டுமான பணியை எடுத்துச் செய்யும் தனியார் நிறுவனத்துக்கு இதுவரை அளித்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக மீதமுள்ள ரூ.6 கோடியை தரவில்லை.

மேலும், நீண்ட நாட்களாக நடைபெற்ற பணி, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏற்கனவே நிர்ணயித்ததை விட கூடுதல் செலவினம் ஏற்பட்டதாகக்கூறி பணியை தொடர முடியாமல் தனியார் நிறுவனம் நிறுத்தி விட்டது. காமராஜர் சாலை-மறைமலையடிகள் சாலை இடையே ஓடும் உப்பனாறு மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் நகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் வாகன நெரிசல் குறையும். மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் எஞ்சியுள்ள 15 சதவீத பாலம் கட்டுமான பணியை முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளை கடந்தும் உப்பனாறு பாலப்பணி முடிவடையாததால், அது பயன்பாட்டுக்கு வராமலேயே காலாவதி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பணியை மீண்டும் தொடங்கி, விரைவில் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகரில் நெரிசலை தீர்க்க நீண்டகால திட்டம் இல்லை

சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக புதுச்சேரி விளங்கி வருகிறது. அதற்கேற்ப, சுற்றுலா பயணிகளை ஈர்க்க மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செய்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. பண்டிகை, விடுமுறை நாட்கள், வாரயிறுதி நாட்களில் நகரில் எங்கு பார்த்தாலும் வெளிமாநிலத்தினரை பார்க்க முடிகிறது.

அவர்களின் வாகனங்களால் நகரின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணா சாலை, காமராஜர் சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நெருக்கடி நிலவுகிறது. ஏற்கனவே, வாகன பெருக்கம், மக்கள் தொகை அதிகரிப்பால் புதுச்சேரி மக்களுக்கே தாங்காத இந்த சாலைகள், சுற்றுலாவாசிகளால் மென்மேலும் அதிகரித்து திக்குமுக்காட வைக்கிறது.

பல அடுக்கு வாகன பார்க்கிங், சாலை விரிவாக்கம், போக்குவரத்து மேம்பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. போக்குவரத்து நெரிசலை தீர்க்க நீண்டகால திட்டங்கள் செய்யப்படாததால் நகரில் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் உள்ளூர் மக்கள் திணறும் நிலை உள்ளது.

`புதுச்சேரிக்கு அவமான சின்னம்’

உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, உப்பனாறு வாய்க்காலில் கழிவுநீர், குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் இருப்பதற்காக பாதாள சாக்கடை போல் தனியாக பெரிய பைப் வழியாக (டூம் வாய்க்கால்) பம்ப் செய்து கடலில் கலக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உப்பனாறு மேம்பாலம் கட்டுமான பணியை முடிக்காமல் இவ்வளவு காலம் நிறுத்தி வைத்திருப்பது புதுச்சேரிக்கு ஒரு அவமான சின்னம் போல் இருக்கிறது. இது பற்றி சட்டசபையில் பலமுறை பேசி இருக்கிறேன். இதனை பெரிய பிரச்னையாக எடுத்து சென்று, பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

The post பயன்பாட்டுக்கு வராமலேயே காலாவதியாகும் உப்பனாறு மேம்பாலம் appeared first on Dinakaran.

Related Stories: