வாலிபரை காலால் மிதித்து கொன்ற அதிமுக நிர்வாகி: உடலை வாங்காமல் உறவினர்கள் 4 மணி நேரம் போராட்டம்

காரைக்குடி: வாலிபரை அடித்து கொலை செய்த அதிமுக நிர்வாகி மீது கொலை வழக்குபதிவு செய்யக்கோரி அவரது உறவினர்கள் ேபாராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடிவேல் அம்பலம் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (37). இவர் கடந்த 21ம் தேதி என்.புதூர் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் கதவை தவறுதலாக தட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த தெய்வராயன் செட்டியார் தெருவை சேர்ந்த அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைசெயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான சண்முகமணி மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கி காலால் மிதித்ததாக கூறப்படுகிறது.

இதில், மயக்க நிலையில் இருந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமவனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 24ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை கருப்பையா கொடுத்த புகாரின்பேரில், காரைக்குடி தெற்கு போலீசார், சண்முகமணி மற்றும் ஸ்ரீராம் மீது சந்தேக வழக்கு பதிவு செய்தனர். நேற்று இறந்த ஆறுமுகத்தின் உடல் காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

அப்போது அவரது உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கொலை வழக்காக பதிவு செய்து சண்முகமணி, ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆம்புலன்சில் இருந்து உடலை கீழே இறக்க விடாமல் 4 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நடத்தினர். டிஎஸ்பி பிரகாஷ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை முடிவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தார். அதன்பின் அவரது உறவினர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து டிஎஸ்பி பிரகாஷ் கூறுகையில், ‘‘முதற்கட்டமாக சந்தேக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு மாற்றப்படும். அதுவரை இறந்தவரின் உடலை மதுரை அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post வாலிபரை காலால் மிதித்து கொன்ற அதிமுக நிர்வாகி: உடலை வாங்காமல் உறவினர்கள் 4 மணி நேரம் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: