நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது

புதுடெல்லி: 2ம் கட்ட மக்களவை தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதி கட்ட பிரசாரத்தில் நேற்று அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடந்தது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 65.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

அடுத்ததாக 2ம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. குறிப்பாக கேரளா (20 தொகுதிகள்), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), அசாம் (5), சட்டீஸ்கர் (3), கர்நாடகா (14), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (7), பீகார் (5), மேற்கு வங்கம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), ஜம்மு காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் 194 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜ கேரள மாநில தலைவர் கே.சுரேந்தரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா ஆகியோரும் களம் காணுகின்றனர். மும்முனை போட்டி காரணமாக வயநாடு தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அதேபோல் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜ சார்பில் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். கர்நாடகாவில் உள்ள பெங்களூர் தெற்கு, பெங்களூர் வடக்கு, மத்திய பெங்களூர், பெங்களூர் புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, சித்ரதுர்கா, ஹாசன், உடுப்பி- சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய 14 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

கர்நாடகாவை பொறுத்தவரையில் பாஜ-ஜனதா தளம் (எஸ்) கூட்டணிக்கும், காங்கிரசுக்கும் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த தொகுதிகளில் முக்கியமாக பெங்களூர் வடக்கு தொகுதியில் பாஜ வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் ஷோபா, மண்டியாவில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளராக குமாரசாமி, பெங்களூர் தெற்கில் பாஜ வேட்பாளராக அக்கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, பெங்களூர் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்பி, ஹாசனில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளராக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்பி., மைசூருவில் பாஜ வேட்பாளராக மன்னர் யதுவீர் உடையார் ஆகியோர் களத்தில் உள்ளனர். மொத்தம் 247 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

2ம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணிக்கு மேல் வெளிநபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிரசாரம் ஓய்ந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: