குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 2 மாஜி முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் எதிர்காலம் என்னாகும்?

புதுடெல்லி: மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கும் குஜராத் உள்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த தேர்தலில் 2 முன்னாள் முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப். 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 ெதாகுதிகளில் நடைபெற்றது. அதேபோல் கடந்த ஏப். 26ம் தேதி கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது.

அவற்றில் அசாம் (4), பீகார் (5), சட்டீஸ்கர் (7), கோவா (2), குஜராத் (26), கர்நாடகா (14), மத்தியபிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்கம் (4) ஆகிய மாநிலங்களும் ஜம்மு காஷ்மீர் (1), ஹாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ (2) ஆகிய யூனியன் பிரதேசங்களும் மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இங்குள்ள 94 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் ஏப். 12ம் தேதி தொடங்கின. மத்திய பிரதேசத்தின் பெத்துல் மக்களவைத் தொகுதியில் ஏப். 26ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. இந்நிலையில் இத்தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததால் இங்கு தேர்தல் வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதனால் பெத்துல் தொகுதியையும் சேர்த்து 95 தொகுதிகளில் வரும் 7ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 95 ெதாகுதிகளில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவற்றில் குஜராத்தின் அனைத்து 26 தொகுதிகளும் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதேபோல் கோவாவின் வடக்கு கோவா, தெற்கு கோவா ஆகிய இரு தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 3ம் கட்ட தேர்தலின் விஐபி வேட்பாளர்கள் பட்டியலில், ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக) – குணா (மத்தியப் பிரதேசம்) தொகுதி, ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி (பாஜக) – தார்வாட் (கர்நாடகா), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி- முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி) – மெயின்புரி (உத்தரபிரதேசம்), ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ் மூத்த தலைவர்) – பெர்ஹாம்பூர் (மேற்கு வங்காளம்), சிவராஜ் சிங் சவுகான் (பாஜக – முன்னாள் முதல்வர்) – விதிஷா (மத்தியப் பிரதேசம்), திக்விஜய சிங் (காங்கிரஸ் – முன்னாள் முதல்வர்) ராஜ்கர் (மத்திய பிரதேசம்) சுப்ரியா சுலே (என்சிபி – சரத்பவாரின் மகள்) – பாராமதி (மகாராஷ்டிரா) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

அதாவது 2 ஒன்றிய அமைச்சர், 2 முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோரின் எதிர்காலம் இந்த தேர்தல் மூலம் தெரியவரும். இந்த தொகுதிகளில் வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் 3, 4ம் கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். நாளை மாலை (மே 5) 6 மணியுடன் பிரசாரம் ஓய்வதால், தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.

அமித் ஷா மீது வழக்கு: கடந்த 1ம் தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த லால்தாவாசாவிலிருந்து சுதா டாக்கீஸ் வரை நடந்த பாஜக பேரணியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த பேரணியில் சிறுவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் பாஜக சின்னத்தை கையில் ஏந்தி இருந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் நிரஞ்சன் ரெட்டி, தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். அதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் ஐதராபாத் தொகுதி வேட்பாளர் கே.மாதவி லதா மற்றும் பாஜக தலைவர்கள் சிலர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

4ம் கட்ட தேர்தலில் 1,717 பேர் போட்டி: வரும் 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வரும் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நான்காவது கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 96 ெதாகுதிகளில் நடைபெறும் 4ம் கட்டத் தேர்தலில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 4ம் கட்டத் தேர்தலில் தெலங்கானாவில் 17 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் ஆந்திராவில் வரும் 13ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் (25 தொகுதி) சட்டப் பேரவை தேர்தலும் (175 ெதாகுதி) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஒடிசாவில் 4 மக்களவை தொகுதிகளுக்கும், 28 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

The post குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 2 மாஜி முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் எதிர்காலம் என்னாகும்? appeared first on Dinakaran.

Related Stories: