தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது

மீனம்பாக்கம்: கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.28 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சர்வதேச போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ராஜஸ்தான் வாலிபரை கைது செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.சென்னை விமானநிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலமாக அதிகளவில் போதைபொருள் கடத்தி வரப்படுவதாக நேற்றிரவு சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்துக்கு ஒரு தனியார் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, இந்த விமானத்தில் வந்திறங்கிய ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28) என்ற பயணி, இங்கிருந்து டிரான்சிஸ்ட் பயணியாக மற்றொரு விமானத்தில் புதுடெல்லி செல்வதற்காக விமானநிலையத்தில் அமர்ந்திருந்தார்.

அவரிடம் சந்தேகத்தின்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், அவர் வைத்திருந்த கைப்பைக்குள் சுமார் ஒரு கிலோ எடையிலான போதைபொருள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த ராஜஸ்தான் வாலிபரின் புதுடெல்லி பயணத்தை ரத்து செய்தனர். அவரை தனியறைக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அவர் தோகாவில் இருந்து ஹெராயின் கடத்தி வந்ததாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அந்த போதைபொருளை பரிசோதித்ததில், அது விலையுயர்ந்த கோகைன் போதைபொருள் என்பதும், அதன் மதிப்பு ரூ.28 கோடி என அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, தோகாவில் இருந்து சென்னைக்கு கோகைன் போதைபொருள் கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த பாரத் வசித்தா என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.28 கோடி மதிப்பில் ஒரு கிலோ எடையிலான கோகைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், பிடிபட்ட வாலிபரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் சர்வதேச போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதுதொடர்பாக, பிடிபட்ட வாலிபரை சென்னை அலுவலகத்துக்கு கொண்டு சென்று, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தனிப்படை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: