சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது

ஓமலூர்: கோயிலில் சாமி கும்பிடுவதில் கலவரத்தை ஏற்படுத்தியதாக அதிமுக, விசிக, பாமகவினர் உட்பட 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 27 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தீவட்டிபட்டியில் பெரிய மாரியம்மன் கோயில் விழாவில் சாமி கும்பிடுவதில் அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து கலவரமாக மாறியது. ஒருவரையொருவர் கற்களை வீசிக் கொண்டனர். கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் விஏஓ அம்பேத்கர் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயன் தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு, கற்களை வீசி கடைகளுக்கு தீ வைத்ததாகவும், மற்றொரு தரப்பினலும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அதிமுக பிரமுகர் விஜயன், விசிக மற்றும் பாமக பிரமுகர்கள் உட்பட இரு தரப்பைச் சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், கடைக்கு தீ வைத்தது குறித்து உரிமையாளர் விஜயா கொடுத்த புகாரின்பேரில், 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஒரு தரப்பில் 14 பேர், மற்றொரு தரப்பில் 13 பேரை கைது செய்து நேற்று மாலை ஓமலூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. வீடியோ ஆதாரங்களைக் கொண்டு ஒவ்வொருவராக போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும், கலவரத்திற்கு காரணமான விஜயன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். கலவரம் நடந்த தீவட்டிப்பட்டி கிராமத்தில் அமைதியான சூழல் நிலவிய போதும் நேற்று 2வது நாளாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. எஸ்பி அருண் கபிலன், கலவரம் நடந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

The post சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: