தனியார் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீடு; முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்: தமிழக கல்வித்துறைக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசில் காங்கிரஸ் கொண்டு வந்த இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவிகித இடங்களில் ஏழை எளிய, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை முன்னுரிமை அடிப்படையில் சேர்க்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி கட்டணத்தை ஒன்றிய அரசு மாநில அரசின் மூலமாக செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2022-23ம் கல்வி ஆண்டில் இச்சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 70,533 மாணவர்களுக்கு ஒன்றிய அரசு மாநில அரசு மூலமாக ரூ.383.69 கோடி நிதி வழங்கியிருக்கிறது. இந்நிதியில் 60 சதவிகிதம் ஒன்றிய அரசும், 40 சதவிகிதம் மாநில அரசும் வழங்குகிறது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்திலுள்ள 8,000 தனியார் பள்ளிகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டு அதில் சேர விரும்பும் மாணவர்கள் இதன்மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க நிறைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. இதில் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பட்டியலின, பழங்குடியின, பின்தங்கிய சமுதாயத்தினரும் இந்த வருமான வரம்பிற்குள் உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பிரிவில் வசதி படைத்தவர்கள் பலனடையக் கூடாது என்பது இதன் நோக்கமாக கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த நிபந்தனையின் அடிப்படையில் பட்டியலின, பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை பாதிக்கப்படுவதாக பரவலாக புகார்கள் வெளிவந்துள்ளன. பள்ளியில் இருந்து ஒரு கி.மீ. தூரத்திற்குள் மாணவர்கள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் மாணவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் பல்வேறு சமயங்களில் செயல்படுவதில்லை. அதில் சேருவதற்கான முயற்சிகளில் நிறைய தடைகள் உள்ளன. அதில் வழங்கப்படுகிற தரவுகள் நிராகரிக்கப்படுகின்றன. இதையெல்லாம் எளிமைப்படுத்துவதற்கும், மாணவர்களின் சேர்க்கை கல்வி உரிமைச் சட்டப்படி அமைந்திட தமிழக கல்வித்துறை முழுமையாக இதனை கண்காணிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய தீர்வினை காண வேண்டும். எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வோடு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தனியார் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீடு; முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்: தமிழக கல்வித்துறைக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: