யாருக்கு ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்பு?

இணை நோயான இதய கோளாறு, உடல் பருமன், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கும், மது அருந்திவிட்டு வெயிலில் அதிக நேரம் சுற்றுபவர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதிக ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரித்தல், மூச்சு வாங்குதல், தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, மயக்கம் வருவது போன்று இருத்தல், குழப்பம் அடைதல், வலிப்பு ஏற்படுதல், சுயநினைவை இழத்தல் ஆகியவை ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான அறிகுறிகள்.

அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைப்பு
தமிழகத்தில் வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும்போது வியர்வை அதிகமாக வெளியேறும். அவ்வாறு வெளியேறும் போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு, ஹீட் ஸ்ட்ரோக், வெப்ப பிடிப்புகள் போன்றவை ஏற்படலாம். எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 5 முதல் 10 படுக்கை தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் அதீத வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை எழுப்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையிலும் 20 படுக்கைகள் உள்ளது. இந்த சிறப்பு வார்டுகளில் வெயில் வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க ஈர துணி, ஐஸ் பேக், ஓஆர்எஸ் கரைசல் உள்ளிட்டவை தயாராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

என்ன செய்ய வேண்டும்?
ஹீட் ஸ்ட்ரோக்கால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். நிழல் உள்ள பகுதிக்கு அந்த நபரை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும். இறுக்கமான உடைகளை அணிந்திருந்தால் அதை நீக்க வேண்டும். மின்விசிறிக்கு கீழே அமர வைக்க வேண்டும் அல்லது அந்த நபரின் உடலில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர் விழிப்புடன் இருந்தால் குளிர் திரவங்களை தரலாம். தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, உப்பு நீர் கரைசலும் தரலாம். ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர் சுயநினைவின்றி இருந்தால் அவரை வேகமாக குளிர்விப்பது அவசியம்.

ஹீட் ஸ்ட்ரோக் பாதிக்காமல் தடுப்பது எப்படி?
வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் வேலை செய்வதால் அல்லது அதிக நேரம் வெயிலில் சுற்றினால் உடல் வெப்பநிலை அதிகரித்து மயக்கம், ஹீட் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படுகிறது. சில சமயங்களில் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது உயிருக்கே அது ஆபத்தாக அமைகிறது. கோடை காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக் முதியவர்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனஅழுத்தத்திற்கு, சளி உள்ளிட்ட நோய்களுக்கு அதிகமாக மருந்து எடுத்துக்கொள்ளும் நபர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இளைஞர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும். எனவே காட்டன் ஆடையை அணிய வேண்டும், அதுவும் இறுக்கமாக அணிய கூடாது. வெள்ளை உள்ளிட்ட லைட் கலர் ஆடையை அணியலாம், கருப்பு உள்ளிட்ட டார்க் கலர் ஆடைகளை அணியும் போது அது வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ளும். இதனால் உடல் வெப்ப நிலை அதிகரிக்கும். இத்துடன் பட்டு ஆடைகள் , ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை தவிர்க்கலாம்.

மேலும் உடலில் நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்த அளவு தண்ணீர், ஜூஸ், இளநீர் குடிக்க வேண்டும். 11 மணிக்கு மேல் வெளியில் வெல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியில் செல்லும் போது தலை சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக நிழலில் அமர வேண்டும். ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டால் அவர்களின் உடல் வெப்பத்தை குறைக்க நடவடிக்கை எடுத்த பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

The post யாருக்கு ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்பு? appeared first on Dinakaran.

Related Stories: