வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி செயலிழப்பு சந்தேகம் தருகிறது: திருமாவளவன் பேட்டி

திருச்சி: வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி செயலிழப்பு சந்தேகம் தருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: விழுப்புரம் மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்தது குறித்து தேர்தல் அலுவலரிடம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் புகார் அளித்துள்ளார்.

அதேபோல் நீலகிரி, ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த மையத்திலும் சிசிடிவி கேமரா செயலிழந்தது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் சமீப நாட்களாக பிரதமர் மோடி நிலையை மறந்து, பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி விமர்சனங்களை முன் வைக்கிறார். தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார்கள் என்ற அளவுக்கு பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல.

அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. மோடி பிரசாரத்தில் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் மோடிக்கு கடிதம் அனுப்பாமல் நட்டாவுக்கு கடிதம் அனுப்புகிறது. தொடக்கத்தில் இருந்தே தேர்தல் ஆணைய செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஆளும்கட்சிக்கு சாதகமாக உள்ளது. பிரதமரிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானாவில் பிரசாரம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி செயலிழப்பு சந்தேகம் தருகிறது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: