தென் மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக மின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இருந்த மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கோடைகாலம் துவங்கும் நேரத்தில் அதிகபடியான மின் நுகர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

அதன்படியே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் மின்தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி தமிழகத்தின் மின் தேவை 20,701 மெகாவாட் ஆகவும், மின்நுகர்வு 454.32 மில்லியன் யூனிட்டுகளாக பதிவானது. அதைத் தொடர்ந்து மே 2ம் தேதி ஒரே நாளில் 20,830 மெகா வாட் மின் தேவை இருந்தது. அதிகபட்ச மின் தேவை பதிவானபோதும் சீரான மின் விநியோகத்தை தமிழக மின் வாரியம் உறுதி செய்தது. அதிகரிக்கும் மின் தேவையால் மின்சார பற்றாக்குறை ஏற்படுமோ என பலர் அச்சம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தியும் தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்திக்கு சாதகமாக காற்று வீசத் தொடங்கி உள்ளதால் மே 2ம் தேதி முதல் மின் உற்பத்தி தொடங்கியது. அதனால் அன்றைய தினமே 916 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. வரும் காலங்களில் காற்று அதிகம் வீசும் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். இதனால் கோடைகால மின் தேவையை சமாளிப்பது எளிதாகும் என அதிகாரிகள் கூறினர்.

The post தென் மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: