5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி

*வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

புதுச்சேரி : புதுச்சேரி நகரின் முக்கிய வீதிகளில் ஒன்றாக இருப்பது நெல்லித்தோப்பு லெனின் வீதி. சாரம் காமராஜர் சாலை மற்றும் திருவள்ளுவர் சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக லெனின் வீதி இருக்கிறது. லாஸ்பேட்டை, சாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு பலரும் லெனின் வீதியை பயன்படுத்துகிறார்கள். அதேபோல், லெனின் வீதியில் இணைக்கும் குறுக்கு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கும் முக்கியமாக இருக்கிறது.

லெனின் வீதியில் மளிகை, எலெக்ட்ரிக்கல், மருந்து என 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அது மட்டுமின்றி மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், ஸ்டார் ஓட்டல், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இருக்கின்றன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த லெனின் வீதியில் பாதாள சாக்கடை பணியானது 30 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் வாய்க்கால், சாலைப்பணிக்காக ரூ.3 கோடியில் டெண்டர் விடப்பட்டு கடந்தாண்டு டிசம்பரில் பணி தொடங்கியது.

முதற்கட்டமாக, சாலையின் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால்களை ஆழப்படுத்தும் பணி தொடங்கியது. அதன்பிறகு, புதிதாக கழிவுநீர் வாய்க்கால்கள் கட்டப்பட்டு, அதன் மீது கான்கிரீட் சிமெண்ட் சிலாப் போடப்பட்டு வருகிறது.

அப்பணியே இன்னமும் முடிவடையாமல் இருக்கிறது. இதற்கிடையே, பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டு, பழைய பைப்களை மாற்றி புதிதாக அமைத்து, வீடுகள், கடைகளுக்கு இணைக்கும் பணியை பொதுப்பணித்துறை கழிவுநீர் கோட்டம் மேற்கொண்டது. ஆனால், கழிவுநீர் வாய்க்கால் பணியை நிறைவடையாமல் இருப்பதால் லெனின் வீதியின் ஒரு பகுதியில் இப்பணி முடிக்கப்படாமல் உள்ளது.

அதேபோன்று, சாலையின் ஒரு பகுதியில் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு இணைப்பு கொடுக்கும் பணியை பொதுப்பணித்துறை குடிநீர் கோட்டம் மேற்கொண்டு வருகிறது. லெனின் வீதியில் சாரம் சந்திப்பில் இருந்து இப்பணியானது கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. வீதியின் மறுபுறம் இப்பணி தொடங்கி முடிவடைய இன்னமும் 10 நாட்கள் ஆகும் என தெரிகிறது. அதுவும், கழிவுநீர் வாய்க்கால் பணி முடிவடையாமல், குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ள முடியாது.

எல்லா பணிகளும் முடிந்த பிறகு தான், இறுதியாக சாலை போடப்படும். அதற்கு இன்னமும் பல மாதங்கள் ஆகும் என தெரிகிறது. மின்துறை, பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு, கழிவுநீர் பிரிவு, சாலை பிரிவு ஆகியவற்றில் ஒருங்கிணைப்பு இல்லை என்றும், பணிகள் தாமதத்திற்கும் இதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுத்தடிக்கும் இப்பணிகளால் லெனின் வீதி வியாபாரிகள், குடியிருப்பு மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். பணிகளை விரைந்து முடித்து லெனின் வீதியை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

`ஒரு மாதத்தில் பணி முடிந்து விடும்’

இது குறித்து ஒப்பந்ததாரர் ரமேஷிடம் கேட்டபோது, லெனின் வீதியில் பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கழிவுநீர் வாய்க்கால் பணி 700 மீட்டரில் 200 மீட்டர் தான் பாக்கியுள்ளது. அதுவும் ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும். இதற்கிடையே, பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு பணி நிறைடைந்து விடும். இப்பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, புதிதாக சாலை போடப்படும்.

இதனால் சாலையை தோண்ட வேண்டிய அவசியம் இருக்காது. முறையாக, சரியாக அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், மற்ற இடங்களில் புதிதாக சாலைகள் போடப்பட்ட ஒருசில நாட்களிலேயே குழி தோண்டுவதால் சாலைகள் பழுதடையும். ஆனால் லெனின் வீதியில் அந்த நிலை இருக்காது. இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும் என்றார்.

`மந்தமான பணியால் வியாபாரம் பாதிப்பு’

இதுபற்றி லெனின் வீதியில் மளிகை கடை வைத்துள்ள முருகானந்தத்திடம் கேட்டதற்கு, லெனின் வீதியில் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறோம். குறிப்பாக, வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது.

இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, லெனின் வீதி வியாபாரிகள், குடியிருப்பு மக்கள் குழு என்பதை ஏற்படுத்தி, பணியை விரைவுப்படுத்த போராட்டம் நடத்தினோம். தேர்தலுக்கு பணியை முடித்து விடுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை 40 சதவீத வேலை மட்டும் நடந்துள்ளது. எல்லா பணிகளும் முடிவடைய இன்னும் பல மாதங்கள் ஆகும் போல் தெரிகிறது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

The post 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி appeared first on Dinakaran.

Related Stories: