கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்தார்..!!

கடலூர்: கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி ராஜேஸ்வரி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்துள்ளார். கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தினவடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவர் கடந்த 15ம் தேதி அதிகாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த ரத்தின வடிவேலுக்கு ராஜேஸ்வரி (16) என்ற மகள் உள்ளார். இவர் கடலூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மார்ச் 15ல் 12ம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு தினத்தன்று அதிகாலையில் தந்தை ரத்தினவடிவேல் உயிரிழந்ததால் மிகவும் துயரம் அடைந்த மாணவி கதறி அழுதார்.

இருப்பினும் இயற்பியல் தேர்வு எழுதுவதற்காக அவர் பள்ளிக்கு வந்தார். தந்தை இறந்த நிலையிலும் தேர்வெழுத வந்த ராஜேஸ்வரிக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். தொடர்ந்து, மனம் தளராமல் ராஜேஸ்வரி, கடலூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி ராஜேஸ்வரி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்துள்ளார். குறிப்பாக தந்தை ரத்தினவடிவேல் இறந்த நாளன்று எழுதிய இயற்பியல் தேர்வில் ராஜேஸ்வரி 100-க்கு 70 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தந்தை உயிரிழந்த சூழலிலும் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: