கோவை குற்றாலத்தில் ரூ.1.50 கோடியில் தொங்குபாலம், தங்குமிடம் சீரமைக்க நடவடிக்கை: வன அதிகாரி தகவல்

கோவை: கோவை மேற்குதொடர்ச்சி மலையடிவாரம் போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால், கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இங்கு குழந்தைகளுக்கு ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.60 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருவியில் குளிக்க சாடிவயல் சோதனைச்சாவடியில் இருந்து வனத்துறையினர் வாகனம் மூலம் அழைத்து செல்லப்படுவர். பின்னர் அங்கிருந்து 15 நிமிடங்கள் அடர் வனத்தில் நடந்து சென்று அருவியை அடையலாம். மேலும், கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதை தவிர வேறு எந்த பொழுதுபோக்கு அம்சமும் அங்கு இல்லாத நிலை இருக்கிறது.

இந்த கோவை குற்றாலத்தின் பழைய பார்க்கிங் பகுதி அருகே கடந்த 2007-ல் சுமார் 150 மீட்டருக்கு தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. அடர் தேக்கு மரங்களின் நடுவில் அமைக்கப்பட்ட தொங்குபலம் அன்றைய காலக்கட்டத்தில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் தொங்கு பாலத்தில் நடக்கவும், புகைப்படம் எடுக்கவும் ஆர்வம் காட்டினர். ஆனால், இந்த பாலத்தை சரியாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தொங்கு பாலத்தின் மரப்பலகைகள், கம்பிகள் அனைத்தும் சேதமடைந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு இல்லாமல் தொங்கு பாலம் இருந்து வருகிறது. இதனை தற்போது வரும் சுற்றுலா பயணிகள் ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர். பலர் ஏன் இந்த தொங்கு பாலத்தினை சீரமைக்கவில்லை என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பலர் தொங்கு பாலத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் இருக்கும் தொங்கு பாலத்தை சீரமைக்க வனத்துறை அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். தவிர, கோவை குற்றலாத்தில் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்த உள்ளனர். இது குறித்து மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ‘‘கோவை குற்றாலத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொங்கு பாலம் சீரமைக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்குமிடம், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடக்க உள்ளது. இந்த பணிகள் தொடர்பாக அரசிடம் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நிதிக்காக காத்திருக்கிறோம். நிதி கிடைத்தவுடன் சீரமைப்பு பணிகள் துவங்கப்படும். இதனால், சுற்றுலா பயணிகள் பயன்பெறுவர்’’ என்றார்.

The post கோவை குற்றாலத்தில் ரூ.1.50 கோடியில் தொங்குபாலம், தங்குமிடம் சீரமைக்க நடவடிக்கை: வன அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: