தோத்திரம் செய்து தொழுது…

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி – சக்தி தத்துவம்

தோத்திரம்செய்துதொழுது, மின்போலும்‌ நின்‌ தோற்றம்‌ ஒரு
மாத்திரைப்‌ போதும்‌ மனத்தில்‌ வையாதவர்‌ வண்மை குலம்‌
கோத்திரம்‌, கல்வி, குணம்‌ குன்றி, நாளும்‌ குடில்கள்‌ தோறும்‌
பாத்திரம்‌ கொண்டு பலிக்குஉழலா நிற்பர்‌ பார்‌ எங்குமே
அறுபத்தி ஏழாவது அந்தாதி

“ஆதியாக”

குழந்தைகள் சில நேரத்தில் படிக்க மறுத்தால் உடன்பாட்டு முறையில் அதற்கு பிடித்த சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை வாங்கித் தருவதாகக் கூறி படிக்க ஊக்குவிக்கிறோம். சில நேரத்தில் குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை போக்க சாமி கண்ணை குத்திவிடும், பூதம் பிடித்துக்கொள்ளும் என்று அச்சுறுத்துகிறோம்.

அதைப்போலவே, அபிராமிபட்டர் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் வழிபடாவிட்டால் துன்பம் ஏற்படும் என்பது போல் கூறி நம்மை வழிபடத் தூண்டுகிறார். ஆசார அனுஷ்டானத்தை எல்லாம் தொடர்ந்து செய்யாது விட்டுவிட்டால் தீங்கு வருவதை சுட்டிக்காட்டுகிறார். இக்கருத்தை மனதில் கொண்டு இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

தோத்திரம் செய்து தொழுது
மின் போலும் நின் தோற்றம்
ஒரு மாத்திரைப் போதும் மனதில் வையாதவர்
வண்மை
குலம்
கோத்திரம்
கல்வி
குணம் குன்றி

நாளும் குடில்கள் தோறும் பாத்திரம் கொண்டு பலிக்குஉழலா நிற்பர் பார் எங்குமே இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கதை இனி காண்போம்.

“தோத்திரம் செய்து தொழுது’’

என்பதனால், இறைவனின் அருளை ஊரறிய பெற்றவர்களான அருணகிரிநாதர், அப்பர், சுந்தரர் போன்ற அருளாளர்கள் பாடிய பாடல்களைப் பாடுவது என்று பொருள்.பாடுவது என்றால் சொல், பொருள் புரியாமல் ஒரு பாடலை வாசிப்பது. உதாரணமாய் வடமொழியில் உள்ள ஸ்தோத்திரங்களைப் பொருள் புரியாமல் பாடுவது. ஓதுவது என்பது பாடலின் பொருள் உணர்ந்து பாடுவது. தோத்திரங்களைப் பொருள் புரிந்து ஆலயத்திலுள்ள அல்லது வீட்டில் வழிபடும் திருவுருவத்திற்கு முன் முறையாக பூசனை முடித்து தோத்திரப் பாடல்களை அறிந்து உணர்ந்து இறைவனை சந்தோஷிக்க அவர்முன் இசைப்பது தோத்திரம் செய்வது என்று பொருள்படும்.

உபாசனையின் பொருட்டு தேவதையின் மூலமந்திரத்தை ஜபம் செய்பவர்கள், தீட்சை பெற்றவர்கள் பஞ்சதசாக்ஷரி மந்திரம் மற்றும் ஸ்ரீசக்கர பூசனையில் முதலில் லலிதா ஸஹஸ்ரநாமம், தேவி மகாத்மியம், கட்கமாலா போன்ற தோத்திரங்களை இசைக்க வேண்டும் என்கிறது பூஜை நெறி. ‘நின்திரு நாமங்கள் தோத்திரமே (66)’ என்று குறிப்பிட்டதிலிருந்து நன்கு அறியலாம்.

லலிதா சஹஸ்ரநாமம் காலை, மாலை மட்டுமே பாராயணம் செய்ய வேண்டும். மாலை வேளையில் செய்வது சிறப்பு. பாராயணம் செய்து முடித்தவுடன் தேங்காய், பூ, பழம், கல்கண்டு நைவேத்தியம் செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்த பொருளைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அளிப்பது சிறப்பு. இதுபோன்று பாராயணம் செய்யும் ஒருசில முறையையே ‘’தோத்திரம் செய்து தொழுது’’ என்கிறார்.

“மின் போலும் நின் தோற்றம்”

ஜபம், தியானம், ஆசனம் அல்லது பிராணாயாமம் இந்த நான்கையும் செய்யும் போது, அதில் அகத்துள் தோன்றும் ஒரு ஒளிக்கற்றையையே “மின் போலும் நின் தோற்றம்” என்கிறார். இது எவ்வாறு என்று சற்று விரிவாகப் பார்ப்போம். சாக்த நெறியில் உமையம்மையின் பூசனையை அந்தர் [அகம்] பஹிர் [புறம்] என்று இரண்டாகப் பிரிப்பர். அந்தர் என்பது அகப்பூசையாகும். நம் மனதிற்கு உள்ளேயே எண்ணங்களால் உமையம்மையை நினைத்து செய்யும் ஒரு வகை பூசனை முறை. பஹிர் என்பது புறப்பூசனையாகும். இறைவிக்காக ஒரு திருமேனியை நிறுவி, கந்தம், புஷ்பம், தூபம், தீபம் நைய்வேத்யம் போன்ற பல பொருட்களை கொண்டு அதில் அபிஷேக ஆராதனைகளை செய்வதாகும்.

இந்த வரியை பொறுத்தவரை அகப்பூசனையில் உமையம்மையை மின்னலைப் போன்று எண்ணி தியானிக்க வேண்டும். இதையே வேதம் ‘வித்யுள் லே கேவ பாஸ்வர:’ என்கிறது. இதற்கு மின்னலைப் போன்று மானுட உடலில் உமையம்மை பிரகாசிக்கிறாள் என்பது பொருள்.

இதையே அபிராமி பட்டர் ‘மின் ஆயிரம் ஒரு மெய்வடி வாகி’ (55) என்றார். ஜபம் செய்வோர் ஆசனத்தின் மீது அமர்ந்து உடல் அசைவற்று நாக்கு அசையாது பத்மாசனம் முதலியன ஆசனத்தை பின்பற்றி அமர்ந்து மூல மந்திரத்தை ஆயிரம் முறைக்கு மேலாக கண்களை மூடி உச்சரிப்பது இதற்கு நாழி வழிபாடு என்று பெயர். இருபத்தி நான்கு நிமிடம் கொண்டது ஒரு நாழியாகும். இப்படி சக்தி மந்திரத்தை உச்சரித்தால் நம் மனதுக்குள்ளே ஒரு மின்னல் போன்ற காட்சி தோன்றும்.

அது மின்னலைவிட வேகமாக மறைந்து விடும். அந்த காட்சியானது மந்திரஜபம் அதிகரிக்க அதிகரிக்க நின்று ஒளிர்வதைக் காணலாம். இப்படி நின்று ஒளிர்கின்ற நிலை வந்தால் ஐம்புலன்களும் மனதிற்கு கட்டுப்படும். இந்த கட்டுப்பட்ட நிலைதான் உபாசனையின் பலம். இதையே `ஒளியே’ (16) என்கிறார். மூல மந்திரங்களை சொல்லி மூச்சை உள்ளிழுத்து உள் நிறுத்தி வெளிவிடுகின்ற `ப்ராணாயாம’ பயிற்சியாலும் மின் போலும் தோன்றும் தோற்றத்தைக் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள `சிவ மானஸ’ பூசை என்ற பாடலை மனப்பாடம் செய்து பொருள் புரிந்து சிந்திப்பதனாலும் இந்த அனுபவத்தைப் பெறலாம்.

‘ரத்னைஃ கல்பிதமாஸனம் ஹிமஜலைஃ ஸ்னானம் ச திவ்யாம்பரம்
னானாரத்ன விபூஷிதம் ம்ருகமதா மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயானிதே பஶுபதே ஹ்ருத்கல்பிதம் க்றுஹ்யதாம்’
இத்தனையும் மனதில் கொண்டே “மின் போலும் நின் தோற்றம்’’ என்கிறார்.
“ஒரு மாத்திரைப் போதும் மனதில் வையாதவர்”

மாத்திரை என்பது எழுத்துக்களை உச்சரிக்கும் கால அளவு. ஒரு மாத்திரை என்பது கண் சிமிட்டும், கை சொடுக்கும் நேரம். மேலும், இலக்கண விதியின் படி மந்திரங்களை உச்சரிக்கப் பயன்படும் கால அளவையை வேதங்கள் “உதாத்தம்’’, “அனுதாத்தம்’’, “ஸ்வரிதம்’’ என்று மூன்று விதமாக கூறுகிறது. ஆகம மந்திரங்களானது “ஹ்ரஸ்வம்’’, “தீர்க்கம்’’, “ப்லுதம்’’ என்ற மூன்று மாத்திரை அளவுகளைப் பின்பற்றுகிறது. மொழி இலக்கணமானது இதே போல் மாத்திரை அளவுகளை பின்பற்றுகிறது.

“அர்த மாத்தா லாகவ் யந புத்ரோத்ஸவம்
மன்யந்தே வையா கரணா:

என்பதால் அறியலாம்

சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட மாத்திரை அளவை உச்சரித்து, பொருள் புரிந்து, பயன்படுத்துவதால் நன்மையும், நன்மக்கள் பேறும், ஆன்மாவைப் பற்றிய அறிவும், உலகியல் உண்மையைப் பற்றிய தெளிவும், ஆத்ம குணமாகிய சத்யம், ஞானம், தர்மம், தயை, சாந்தி, க்ஷமா என்ற ஆறுவகை குணங்களும் விளங்கித் தோன்றும் என்கிறது மந்திரசாஸ்திரம்.
அதனாலேயே “ஒரு மாத்திரைப் போதும்” என்ற எண்ணிக்கையைப் பயன்படுத்துகிறார்.

“மனதில் வையாதார்” என்ற சொல்லால் மனதில் அபிராமியை பதிக்கின்ற நேரத்தை இங்கே சொல்கின்றார். ஒரு நாழிப்பொழுது கண்களை மூடி அசையாது சவாசனத்திலோ, பத்மாசனத்திலோ அமர்ந்து முறைப்படி மனதிற்கு மந்திரம் சொன்னாலோ, இருபத்து நான்கு நிமிடங்கள் தொடர்ந்து பிறர் செவிக்கு எட்டும்படியான பாராயணம் மந்திரங்களை சொன்னாலோ, மனம் ஒருமித்து இறைவியைப் பற்றி கூறக்கூடிய தேவி பாகவதம் அல்லது ஆகமம் இவற்றை படித்தாலோ, பிறர் சொல்ல கேட்டாலோ, பாராயணம் செய்தாலோ அவரவர் இயல்பிற்கு தக்கவாறு இப்பயிற்சியில் ஏதேனும் ஒன்றை செய்பவரை மனதில் வைத்தவர் என்கின்றார்.

ஒரு நாழி மனது ஒருமித்தவர், பாராயணம் செய்தல், தியானம் செய்தல், ஆசனம் செய்தலில் ஈடுபடுவோருக்கு ஒரு நொடிப்பொழுது உமையம்மை மனதில் மின்னல் போன்று தோன்றி மறைவாள் என்கின்றது ஆகமம். அப்படி தோன்றி மறைந்தால் வண்மை, குலம், கோத்திரம், கல்வி, குணம், வளமை இவை அனைத்தும் உபாசிப்ப வனுக்கு அனுபவ சாத்தியமாகக் கிட்டும். இதைச் செய்யாதவர் அந்த நன்மையை இழக்கின்றார்கள் என்பதையே எதிர்மறையாக “ஒரு மாத்திரை போதும் மனதில் வையாதார்” என்கின்றார்.

“வண்மை”இப்பாடலில் இச்சொல் முதலாக ஆறு சொற்கள் மற்றும் மீதமுள்ள வரியாலும் இறைவனிடம் அருள் பெறுவதற்கான பிரார்த்தனையை செய்தவர்கள் அதை செய்யாமல் இருப்பதனால் என்னென்ன நன்மைகளை இழக்க நேரிடுகிறது என்பதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். அதை பட்டர் பிரார்த்தனை செய்யாதவர்களை அச்சுறுத்துவதற்காக குறிப்பிடுகிறார் என்பதாக நாம் புரிந்துகொள்ளக் கூடாது. மேலும், இறை நம்பிக்கை உள்ளவர்கள் உபாசனை வழிபாடு செய்தும் பலன் விளையாதற்கான காரணம் என்ன? என்பதை அறிந்துகொள்ளவும் இப்பாடலில் மறைமுகமாக நமக்கு அறிவுறுத்துகிறார். வண்மை முதல் துவங்கி பார் எங்குமே என்பதுவரையுள்ள சொற்களின் வழியும் இரண்டு பொருள்பட விளக்கியிருக்கிறார். அதை நன்கு அறிந்துகொள்வது தான் அபிராமி பட்டரின் நோக்கத்தை நமக்கு புரியவைக்கும். இல்லையேல் அபிராமி பட்டரை தவறாக புரிந்து கொள்ள காரணமாக அமைந்துவிடும்.

“வண்மை”

என்ற சொல், வலிமை, வளமை, அழகு, ஈகை, நற்குணம், புகழ், மெய்மை போன்ற உயர்ந்த பொருள்களைக் குறிப்பது. பட்டரோ இறையருளால் இதை பெறலாம் என்கிறார்.
அப்படியானால், இறையருளை எண்ணாதவர்கள் இத்தகைய உயர்ந்த நற்பண்புகளை எல்லாம் இழக்க நேரிடுகிறது என்று குறிப்பிடுகிறார். இதில் பிரார்த்தனை செய்வோருக்கும், செய்யாதோர்க்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்த்தவே “வண்மை குன்றி’’ என்கிறார்.

“குலம்”

என்ற சொல்லிற்கு நன்மக்கட்பேறு, ஒழுக்கத்தால் அடையும் மேன்மை, நன்மை என்று பொருள். ஒரு இனத்தில் தோன்றிய மக்கள் தங்களுக்குள் உண்டான ஒற்றுமையைக்
குறிப்பிடுகிறார். ஒரு தனிமனிதனின் சமய உணர்வு சரிவர இருப்பின் அது வழிபடுவதற்கு மட்டுமின்றி அச் சமுதாயத்தை சார்ந்த அனைவருக்கும் பயனைத் தரும் என்பதனால் தனக்கு மட்டும் ஏற்படும் சுய முன்னேற்றத்திற்காக தெய்வத்தை வணங்கவில்லை என்றாலும், அவர்களைச் சார்ந்தவர்க்கு ஏற்படும் நன்மையும் இல்லாது போகும் நிலை ஏற்படுகிறது. இதை நன்கு அறிவுறுத்தவே “குலம் குன்றி’’ என்கிறார்.

“கோத்திரம்”

என்ற சொல்லிற்கு செல்வம், ஒரு இனத்தார் மட்டும் கூடி வாழும் தெரு [அக்ரஹாரம் – அந்தணர்கள் மட்டும் வசிக்கும் தெரு] ஒரு இனத்தார் அனைவருக்கும் சொந்தமான பூமி [அந்தணர்களுக்கு சொந்தமான இடம் பிரம்மதேயம், சமணர்களுக்கு சொந்தமான இடம் பள்ளி, பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் பேடு] ஒரு குறிப்பிட்ட இனத்தை குறிக்கும் வர்க்கம் அந்தணர், வணிகர், கொல்லர் என்ற ஒரு தலைப்பட்ட ஒழுக்கத்தைக் கொண்டவர்களை பழங்காலத்தில் வர்க்கம் அல்லது கோத்திரம் என்று சொல்வது மரபு.

இதுபோல் பல கோத்திரம் இருந்தது. ஒவ்வொரு இனத்திற்கும் செய்யும் தொழில், வளர்ச்சி, மற்றும் உணவு போன்ற பல மாறுதல்கள் உண்டு. அதுபோல் வழிபாட்டிலும் பல மாறுதல்கள் உண்டு. சைவ வழிபாடு, அசைவ வழிபாடு, தீமிதித்தல், கரகம் எடுத்தல் போன்ற வழிபாடுகள் உள்ளன.

அதைத்தான் ’’கோத்திரம்’’ என்று குறிப்பிடுகிறார். இத்தகைய இனம் சார்ந்த வழிபாடு நின்றாலோ, வழிபடுபவர்கள் இல்லை என்றாலோ அது சார்ந்த சமூக பயன் இல்லாது போய்விடும். உதாரணமாக, உழவர்களின் மன்மதன் வழிபாடு நின்றால் நெல் உற்பத்தி குறையும், வணிகர்கள் இலக்குமி தேவி வழிபாடு நின்றால் செல்வத் தட்டுப்பாடு ஏற்படும், இத்தகைய தீமையை சுட்டிக்காட்டவே ஓர் இனத்தார் வழிபடும் தேவதையை அதன் பயனைச் சார்ந்த கூட்டு வழிபாட்டை வலியுறுத்துகிறார். அந்த வழிபாட்டினை இழப்பதால் ஏற்படும் விளைவையே “கோத்திரம் குன்றி’’ என்கிறார்.

“கல்வி’’

என்பது, இப்பாடலைப் பொருத்தவரை உலகியல் கல்வியை குறிப்பிடவில்லை மாறாக “வி” சிறந்த “கல்” பழகிப் பெறும் தெளிவு அதாவது சிறந்ததான தேவதைகளிடத்து உபாசனையால் பழகி அதனால் தோன்றும் அனுபவத் தெளிவை கல்வி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இதை ‘கல்வி தரும்’ (69) ‘கலையாத கல்வியும்’ என்ற பதிகத்தில் இருந்தும் அறிந்துகொள்ளலாம். மேலும், ‘கல்வி’ என்ற சொல்லுக்கு நூல், புண்ணியத் தோற்றம் வித்யா, ஞானம் பழக்கம் என்பதும் பொருள். இந்த அனைத்துப் பொருளிலேயும் அபிராமிபட்டர் இச்சொல்லை பயன்படுத்துகிறார்‌.

நூல் என்பது வேதத்தையும் ‘வேதம் சொன்ன வழிக்கே’ (79) ‘புண்ணியம் செய்தனமே மனமே’ (41) என்று தீட்சை பெறுவதனால் மனது அடையும் உயர்வை புண்ணியம் என்பதாலும் வித்யா என்று “மனு வித்யா’’, “சந்த்ர வித்யா’’, “மஹா வித்யா’’, “ஸ்ரீவித்யா’’ என்று உபாசனை நெறியினால் பெற்ற மந்திர சித்திகளை குறிப்பிடுகிறார். இந்த மந்திர சித்தியால் மனிதர்களால் செய்ய இயலாத எதிர்காலத்தை அறிந்து சொல்லுதலும், மறைந்த பொருள்களைக் கண்டு பிடித்தல், போன்ற பல அதிசயங்களை மந்திர அப்யாசத்தால் செய்து பலனைப் பெறலாம். இத்தகைய சமய அதிசயக் கல்வியையே, இங்கே குறிப்பிடுகிறார். இதற்கு “ஞானம்” என்றும் பொருள். ஞானம் என்பது பட்டரைப் பொருத்தவரை அபிராமியம்மையின் அருளைப் பெறுவது குறித்த அனுபவ அறிவாகும்.

இதை ‘அறிந்தேன் எவரும் அறியா மறை’ (2) ‘நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய்’ (61) என்பதனால் அறியலாம். இந்த ஞானத்தை உபாசனை தெய்வமே அருளும், அல்லாது அதைப் பெற்ற அடியார் அருள்வார். கல்வி என்பதற்கு பழக்கம் என்று ஒரு பொருள். இப்பாடலைப் பொருத்தவரை ஜபம், தியானம், பூஜை, பிராணாயாமம், ஆசனம் இவற்றைப் பழகுவதையே குறிக்கும்.

இதை ‘மன்னியது உன்திரு மந்திரம்’ (6) ‘குறித்தேன் மனத்தினில்’ (76) [த்யானம்] ‘பதயுகம் சூடும் பணி’ (27) [பூஜை] ‘கற்பது உன் நாமம்’ (12) [ப்ராணாயாமம்] என்பதனால் நன்கு அறியலாம். இறைவியை நினைக்காதவர் இத்தகைய உயர்ந்த பயனை அளிக்கும் கல்வியை இழப்பார்கள் என்று ப்ரார்த்தனையின் இன்றியமையாமையை எதிர்க் கூற்றாய் வலியுறுத்துகிறார். இந்த அனைத்து கருத்துக்களையும் மனதில்கொண்டே “கல்வி குன்றி’’ என்கிறார்.

“குணம் குன்றி”

என்பதனால், பிரார்த்தனையால் முன்னர் கூறிய நற்பண்புகளை அடையலாம். ஆனால், பிரார்த்தனை செய்யாதவர் அதை இழப்பதையே “குணம் குன்றி’’ என்கிறார். “நாளும் குடில்கள் தோறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே”என்பதால், உணவிற்காக பிச்சை எடுக்கும் நிலையை குறிப்பிடும் ஒரு செயலைக் குறிப்பிடு கிறார். உணவு என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி, இவற்றிற்கு உணவான தட்பவெப்பம், உணவு, காற்று, வாசனை, ஒலி இவை அனைத்தையுமே குறிக்கும் சொல். இறைவிக்கு பலியிட்டு வழிபாடு செய்தால் உணவுப் பஞ்சம் வராது என்கிறது ஆகமம்.

அத்தகைய பூசனையை பலி [சோற்று உருண்டை] வைத்து வழிபாடு செய்வோர்க்கு மகிழ்ச்சியான புலனின்பத்துடன் கூடிய வாழ்க்கை உண்டாகும். அதை செய்யாவிட்டால் அந்த பயன் கிடைக்காமல் போகிறது. அத்தகைய வழிபாட்டை வலியுறுத்தவே எதிர்மறை வாக்கியமாக “நாளும் குடில்கள் தோறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே’’ என்கிறார்.

“அந்தமாக”

“தோத்திரம் செய்து தொழுது’’ என்பதனால் வேத ஆகம திருமுறைகளில் சொல்லப்பட்டபடி சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொன்ன வழி வழிபாடு செய்து சாத்திரங்களில் சொன்ன வண்ணம் இறையருள் அனுபவத்தை இறையருளால் உருவாக்கப்பட்ட பொய்யாத சத்திய வாக்கை தன்னகத்தே கொண்ட மந்திர தோத்திரங்களையும் சமயப் பாடல்களையும் முறையாக இசைப்பதையும் குறிப்பிடுகின்றார். தொழுது என்பதனால் தோத்திரம் செய்யும் முறைமையை சொல்கிறார்.

“மின் போலும் நின் தோற்றம்’’ என்பதனால் இறையருட் காட்சியானது ஜபம், தியானம், பூஜை முதலியவற்றில் ஒரு நொடி தோன்றி மறைந்து விடும் அனுபவப் பண்பை குறிப்பிடுகின்றார். “ஒரு மாத்திரை போதும் மனதில் வையாதவர்’’ மந்திரங்களை உச்சரிக்கும் கால அளவை பற்றிய ஆகமக் குறிப்பைக் குறிப்பிடுகின்றார்.

இறை எண்ணங்களை முற்றிலும் விலக்கியவர்களையும் சாத்திர ஒழுக்கங்களை சரியாக பின்பற்றாதவர்களையும் பின்பற்றுகிறேன் என்று நினைத்துக்கொண்டு அறியாமையால் தவறாக பின்பற்றுபவர்களையும் உலகியல் இன்பங்களில் மூழ்கி இறையின்பத்தை மறந்தவர்களை குறிப்பிடுகிறார். “வன்மை குலம் கோத்திரம், கல்வி, குணம் குன்றி’’ என்பதனால் இறைவியின் அருளானது இந்நற்பண்புகள் குன்றாது வளரும் நம் அறியாமையால் அவள் அளிக்கும் அருள்கொடையை நாம் பெற மறுத்து தவறவிடுகிறோம் என்று நமக்கு எதிர்முகமாக அறிவுறுத்துகின்றார்.

“நாளும் குடில்கள் தோறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே’’ கேட்ட மாத்திரத்திலேயே கொடுக்கும் உமையம்மையின் நினைவை விலக்கி தான் நினைத்ததை அடைய உலகிலுள்ள பிறரை நாடி அது கிடைக்காமல் ஏங்கி நிற்கும் மனிதர்களை அறிவுறுத்தி இறைவியை மாத்திரைப் பொழுதாவது நினைக்காதவர்களது நிலையைச் சுட்டி இறை நினைப்பை வலியுறுத்துகிறார். அவளையே நினைப்போம் அருள் பெறுவோம்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post தோத்திரம் செய்து தொழுது… appeared first on Dinakaran.

Related Stories: