மகர ராசி முதலாளி செய்யும் தொழிலே தெய்வம்

மகர ராசியில் அல்லது மகர லக்கனத்தில் பிறந்தவர்கள், தொழில் செய்வதற்காகவே 100 சதவீதம் பிறப்பெடுத்தவர்கள். இவர்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், தன் வாழ்க்கையின் 23மணி நேரமும் தொழில் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார்கள். பொதுவாக சனியின் ராசியாகிய மகர – கும்ப ராசியினர், ஆள் அடிமை, அசமந்தம், முடக்கம் போன்ற தன்மைகளைக் கொண்டவர்கள். மற்றவருக்காகப் பணி செய்வதில் நூறு சதவீதம் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்கள். வேலையை மாற்றிக் கொண்டால் இவர்களின் விஸ்வாசமும் மாறி விடும். நிதானப் போக்கை பின்பற்றும் இவர்கள், இன்னும் கொஞ்சம் விரைவாக செயல்படலாம் என்று பிறரால் விமர்சிக்கப்படுவர். எடுத்த காரியங்களை தொடர்ந்து செய்யாமல், அங்கங்கே முடக்கிவிட்டு அடுத்தடுத்த காரியங்களை தொடங்கிச் செய்யும் பழக்கமும் மகர ராசியினருக்கு உண்டு. ஆனால், இவை அனைத்தும் பொதுவான குணங்களாகும்.

மகர ராசியினர் மேலாளர், கண்காணிப்பாளர், மேலதிகாரி, தொழிலதிபர் என்ற நிலையில் இருந்தால், பணியாட்களிடமிருந்து 100 சதவீதம் உழைப்பை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள். தானும் தன்னால் முடிந்த வரை கடைசிச் சொட்டு ரத்தமும் வேர்வையும் இருக்கும்வரை வேலை செய்வர். நிறுவனத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பார்கள். ஓய்வறியாத உழைப்பும் மேம்பாடு குறித்த சிந்தனையும், இவர்களின் இதயத்துடிப்பாகும்.

அதிகார மோகம்

மகரராசி முதலாளி / மேலதிகாரி / மேலாளர் போன்றோர் தன்னை எதிர்த்து எவரும் கேள்வி கேட்பதை விரும்புவதில்லை. தான் சொன்னதை அப்படியே கேட்டுச் செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்ப்பதன் காரணம், அப்பணிகள் குறித்து அவர்கள் அதிகளவில் சிந்தித்துத் திட்டமிட்டு, இவருக்கு இன்ன பணி என்று பணிகளை வரையறுத்துப் பின்பு அதனை பணியாளர்களிடம் சொல்வார்கள். எனவே, மகர ராசி மேலதிகாரி / முதலாளியைவிட அதிகமாக அந்த வேலையைக் குறித்து சிந்தித்தவர் வேறு எவரும் அந்த நிறுவனத்தில் இருக்க இயலாது.

மகரராசிக்காரர், தனக்கு முழு அதிகாரம் இருந்தால் மட்டுமே ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்வார். தன்னுடைய பொறுப்பைச் செம்மையாக செய்து முடிக்க வேண்டும் என்பதே அவருடைய லட்சியமாகும். தகுதியான பணியாளரைக் கொண்டு வேலையைத் தரமாகச் செய்து முடிப்பார். உயர்ந்த குறிக்கோளும் மேலான சிந்தனையும் உடையவர்.

திட்டமிடுதல்

மகர ராசி அதிகாரி மற்றும் முதலாளிகள் வினைத்திட்பம் உடையவர்கள். தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். அவர்கள் சார்ந்த தொழில் குறித்து அவர்களுக்கு தெரியாத விஷயமே இருக்காது. அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் அல்லது நா நுனியில் வைத்திருப்பார்கள். கேட்டவுடன் சொல்லக் கூடிய நினைவாற்றல் உடையவர்கள். யாரும் இவர்களுக்குத் தெரியாது என்று ஏதேனும் புதிய தொழில்நுட்ப விஷயங்களைச் சொல்லி இவரை இம்ப்ரெஸ் செய்யவோ, ஏமாற்றவோ இயலாது. தொழில் சார்ந்த விஷயத்தில் தன்னை யாரும் ஏமாற்றி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

மகரராசி முதலாளி / மேலதிகாரி நியாயமாகவும் நேர்மையாகவும் தொழிலாளர்களிடம் நடந்து கொள்வார்கள். தாம் திட்டமிட்டபடியே அன்றாட வேலை அன்றாடம் செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். வேலையை முடிக்காமல் எவரும் வீட்டுக்குக் கிளம்ப முடியாது. இவர் பிரித்துக் கொடுத்த வேலையை அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின் படியே செய்ய வேண்டுமே தவிர, அவரவர் அவரவர் இஷ்டத்திற்கு எதையும் செய்து முடிக்க இயலாது. அப்படி செய்ய விரும்பினால், அதை இவரிடம் சொல்லி இவ்வதிகாரியின் அல்லது முதலாளியின் அனுமதியைப் பெற்றே செய்ய வேண்டும். தனக்குத் தெரியாமல் ஒரு சிறு துரும்புகூட அசைவதை மகரராசி முதலாளியால் / அதிகாரியால் ஏற்றுக்கொள்ள இயலாது.

மகரராசி முதலாளி, தன் எண்ணப்படியும், கருத்துப் படியும், திட்டப்படியும் எல்லாம் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும், அதன் தொழில் நேர்த்தி (professionalism) இருக்க வேண்டும் என்று விரும்புவர். அவ்வாறு அவரால் செய்து காட்டவும் முடியும் என்பதால், மற்றவர்களிடம் அத்தொழில் நேர்த்தியை அவர் எதிர்பார்க்கிறார்.

பொய், புரட்டு அறிவார்

மகரராசி முதலாளியிடம் எவரும் பொய் சொல்வதோ, சாக்குபோக்கு சொல்வதோ இயலாது. பணியாளர் பேசத் தொடங்கும் போதே அவர் சொல்வது பொய் என்று இவருக்குத் தெரிந்துவிடும். வேலை வாங்குவதில் கண்டிப்பாக இருக்கும் இவர், பணியாட்களை தட்டிக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துகொடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டார். ஆனால், வேலை சரியாகவும் சொன்ன நேரத்தில் சொன்ன விதத்திலும் முடிந்திருக்க வேண்டும். அதில் இரக்கம் காட்ட மாட்டார். எப்போதும் பணிகளைப் பற்றிய சிந்தனையில் இருக்கக்கூடிய இவர், தூங்கும் போது தட்டி எழுப்பி கேட்டால்கூட தெளிவான (ஒர்க் ரிப்போர்ட்) பணி அறிக்கையைச் சமர்ப்பிப்பார்.

பாராட்டு விரும்பி

மகரராசிக்காரர்கள் முதலாளி மற்றும் அதிகாரி, தன்னை அனைவரும் துதித்துக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பர். போற்றிப் புகழ வேண்டும். தன்னுடைய அறிவையும் திறமையும் மெச்சி பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இவர்களுக்குள் இருக்கும். இந்த எதிர்பார்ப்பு, குழந்தைத்தனமாகத் தோன்றினாலும்கூட சில வேலைகளில் தன்னை பாராட்டாத நபர்களை இவர்கள் வெறுக்கவும் புறக்கணிக்கவும் அலட்சியப்படுத்தவும் அவமானப்படுத்தவும் செய்வார்கள் என்பது நிச்சயம்.

சொகுசு விரும்பி

மகரராசி முதலாளி அல்லது மேலதிகாரி வரும்போது, அவருக்கு வேண்டிய வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கவேண்டும். வாங்க சார் என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கக் கூடாது. இவர் ஒரு சிவில் இன்ஜினியர் ஆக இருந்தால், கட்டுமானத் தளத்திற்கு அவர் வந்தவுடன் அவருக்கு மடக்கு நாற்காலியை விரித்துப் போட்டு ஒருவர் குடை பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். மற்றொருவர் உடனே ஒரு கூல் ட்ரிங்க் வாங்கி வைத்திருந்து கொடுக்க வேண்டும். விசிறிவைத்து வீசலாம். அவரைச் சிறிது நேரம் வெயில் தெரியாமல் சொகுசாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பத்து நிமிடம் அன்றைய வேலை விவரங்களைக் கேட்டுவிட்டு பிறகு அந்த வேகாத வெயிலில் அவர் அந்த கட்டுமானத் தளத்தை ஒரு மணி நேரம் சுற்றி வருவார். அவர் வெயிலுக்கும் மழைக்கும் அஞ்சுகிறவர் கிடையாது.

மகரராசி அதிகாரி அல்லது முதலாளியை யாரும் `ஸ்பெஷலாக’ கவனிக்காவிட்டால், துரும்பு விஷயத்தைகூட தூணாக பெரிதுபடுத்தி பேசி அனைவரையும் கண்டமேனிக்கு திட்டுவது, அவர்கள் மனதில் சேற்றை வாரி இறைத்து விட்டுச் செல்வார். அவர் திட்டியதை வாழ்நாள் முழுக்க அந்த பணியாளர்கள் மறக்க முடியாதபடி அவ்வளவு கேவலமாக திட்டிவிடுவார். மறுநாள் வரும்போது முதல் நாள் எதுவுமே நடக்காத மாதிரி அவர்களுடைய வேலையைப் பார்த்துவிட்டுச் செல்வார்.

(அடுத்த இதழில்…)

The post மகர ராசி முதலாளி செய்யும் தொழிலே தெய்வம் appeared first on Dinakaran.

Related Stories: