தெளிவு பெறுஓம்

நவக்கிரகங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?
– தேவகி, சிதம்பரம்.

நவக்கிரகங்களைப் பற்றி நாம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதைவிட தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். நவக்கிரகங்கள் என்பது நம்முடைய வினைகளை தீர்மானிக்கின்ற கிரகநிலைகள். நவக்கிரகங்களுக்கு நவகிரக பதவி கொடுத்து அந்தந்த வினைகளுக்கு தகுந்தவாறு நியாயம் செய்ய நியமித்திருப்பவன் இறைவன். எனவே தனியாக நவககிரகங்களை பூஜை அறையில் வைத்து வழிபடும் பழக்கம் இல்லை. அதை யாரும் சொல்லவும் இல்லை. எல்லா கோயில்களிலும் சுப்ரபாதம், கௌசல்யா சுப்ரஜா என்று ஆரம்பிக்கிறது என்ன காரணம்? கௌசல்யா சுப்ரஜா என்ற ஸ்லோகம் ராமாயணத்தில் உள்ளது. ராம லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஸ்வாமித்திரமுனிவர் காட்டிற்குச் செல்லுகின்றார்.

அங்கே ராமரும் லட்சுமணரும் நதிக்கரை ஓரத்தில் புல்லணையின் மீது தூங்குகின்றார்கள். அவர்களை அதிகாலை எழுப்புவதற்காக வருகிறார், விஸ்வாமித்திரர். ‘‘சந்தியாவந்தன நேரம் வந்துவிட்டது. நீ காலைக் கடமைகளை எல்லாம் செய்ய வேண்டும். கௌசல்யா புதல்வனே, ராமா, எழ வேண்டும்’’ என்ற அர்த்தத்தில் விஸ்வாமித்திரர், பாடினார். முதல் சுப்ரபாதம் இப்படி அமைந்துவிட்டதால், பெரும்பாலும் எந்தக் கோயிலுக்கு சுப்ரபாதம் எழுதினாலும், இந்த ஒரு ஸ்லோகத்தை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு,அந்தந்த கோயிலுக்குரிய மற்ற விஷயங்களை இணைத்து சுப்ரபாதம் இயற்றும் வழக்கம் வந்துவிட்டது.

?ஒருவருடைய ஆன்மிக முன்னேற்றத்திற்கு குரு அவசியம் என்று சொல்லுகின்றார்களே குரு அவசியம் தானா?
– முத்துராஜன், மதுரை.

நம்முடைய இந்து மதத்தில் மட்டுமல்ல, எல்லாச் சமயங்களிலும், குரு இல்லாவிட்டால் ஆன்மிக முன்னேற்றம் அடைவது என்பது சிரமமான காரியமாக இருக்கும் என்றே சொல்லியிருக்கிறார்கள். நமது இந்து மத ஞானிகள் இதை மிகவும் வலியுறுத் தியிருக்கிறார்கள். குருவின் தேவை பற்றி, ரூமி என்கின்ற பாரசீக சூஃபி ஞானி சொல்வதைப் பாருங்கள்.

‘‘நமக்கு சரியான வழி நடத்துதல் இல்லையென்றால் நாம் இரண்டு நாட்களில் கடக்க வேண்டிய தூரத்தை 200 வருடங்களில்கூட கடக்க முடியாமல் போய்விடும் இதுதான் உண்மை நாம் ஒரு ஊருக்குச் செல்லுகிறோம் என்று சொன்னால் ஏற்கனவே அந்த ஊருக்குச் சென்று வந்தவர் வழிகாட்டினால் நாம் மிக எளிதாக அடைந்து விடலாம் அதைத்தான் குருமார்கள் செய்கின்றார்கள்.’’ அருணகிரிநாதர் கடைசியாக எழுதிய நூல் கந்தர் அனுபூதி அதில் கடைசியாக எழுதிய பாடல் முருகன் தனக்கு குருவாக வந்து அருள வேண்டும் என்பது தான்.

“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!’’
– இந்தப் பாடலை தினம் சொல்லுங்கள். குரு, தானே வருவார்.

?சிலர் எந்த செயலைச் செய்தாலும் தோல்வி அடைந்து விடுகிறார்களே?
– சுதா ெஜய சந்திரன், மதுரை.

இந்தக் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. எந்தச் செயலை செய்தாலும் அவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்று சொன்னால், எந்தச் செயலையுமே அவர்கள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்யவில்லை என்றுதான் பொருள் ஒன்றைச் செய்துவிட்டு, அது வெற்றியடையவில்லை என்று அவர்களுக்குத் தோன்றினால் அதை அப்படியே போட்டுவிட்டு அடுத்த செயலுக்குச் சென்றுவிடுவார்கள். உலகப் புகழ் பெற்ற சதுரங்க வீரர் ஒரு கருத்து சொல்லுகின்றார்.

“10 ஆண்டுகள் தொடர்ந்து அயராமல் முயல்பவர்கள் நிச்சயம் அந்த துறையில் கிராண்ட் மாஸ்டர் ஆகிவிடுவார்கள். இதில் அதிசயம் எதுவும் இல்லை. நான் பத்து ஆண்டுகளாக சதுரங்கம் ஆடியதில் 500 வகையான தாக்குதல்கள் இருக்க முடியும் என்பது தெரிந்தது, இனி என்னை ஒருவர் வெல்ல வேண்டும் என்று சொன்னால், 51வது வகையான தாக்குதலைத் தெரிந்த ஆள் வந்தால்தான் முடியும்” என்றார். எல்லா வெற்றிக்கும் இதையே காரணமாகச் சொல்லலாம். உலகியலுக்கு பொருந்தும் இந்த பயிற்சி ஆன்மிகத்துக்கும் பொருந்துமா என்று கேட்கலாம். நாமாகத்தான் இது உலகியல் இது ஆன்மிகம் என்று பிரித்துப் பார்க்கிறோம். இரண்டும் ஒன்றுதான்.

திருப்பாணாழ்வார் வாழ்நாள் முழுக்க காவிரிக் கரையில் நின்று ஸ்ரீரங்கநாதனை மட்டும் தியானித்துப்பாடுகிறார். ஒருநாள், இரண்டு நாளல்ல, பல நாள்கள் இதை மட்டுமே ஊக்கத்தோடு செய்கிறார். செயலும் நோக்கமும் ஒரே கோட்டில் செல்கிறது. அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே என்று அவரை நோக்கியே தவமிருந்தார். பாடினார், ஆடினார். ஒருநாள் அரங்கனே அவரை தனது புரோகிதரின் (லோக சாரங்க முனிவர்) தோளின் மீது எழுந்தருளச் செய்து தன்னுடைய அங்கங்களையும் (அவயவ சோபை) முழுமையான வடிவத்தையும் (சமுதாய சோபை) காட்டி ஆட்கொண்டான் என்பது வரலாறு. ஒன்றே செய், நன்றே செய் இன்றே செய். தோல்வியே வராது.

?வாழ்க்கைக்கு மிக முக்கியத் தேவை என்ன?
– தனலட்சுமி, மடிப்பாக்கும், சென்னை.

பொறுமையும் மனவலிமையும்தான் முக்கியத் தேவை. எதுவும் முதலில் தாங்க முடியாது என்றுதான் தோன்றும். பிறகு பரவாயில்லை சமாளித்து விடலாம் என்று தோன்றும். பிறகு இந்த விஷயம் கடந்து விடலாம் என்று தோன்றும். பிறகு இதற்காகவோ இத்தனை வருந்தினோம் என்று தோன்றும். இந்த உணர்வு வரும் வரை வலியை தாங்கும் வலிமையும் பொறுமையும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் வென்றுவிடலாம்.

இந்த வலிமையையும் பொறுமையையும் தருவதுதான் ஆன்மிகம் அதனால்தான் அருளாளர் களால், நமன் தமர் தலைகள் மீதே நாவலிட முடிந்தது (தொண்டரடிப் பொடியாழ்வார்). ‘‘காலா, உன்னை நான் சிறு புல் என மதிக்கிறேன், என் காலருகே வாடா, உன்னை சற்றே மிதிக்கின்றேன் (பாரதி) என்று பாடமுடிந்தது.

?வளைந்து கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்று சொல்கிறார்கள். ஆனால், பலர் அதனை பலவீனமாகத் தானே கருதுகின்றார்கள்.
– கார்த்திக், சென்னை.

எது பலவீனம் எது பலம்? என்று பலருக்கும் புரிவதில்லை. நிமிர்ந்து நிற்பதுதான் பலம் என்று நினைத்து நொடிந்து விடுகின்றார்கள். வளைந்து கொடுப்பதுதான் பலம். எதற்குமே சாய்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் வேலைவிட வளைந்த வில் அம்புதான் அதிக தூரம் பாயும் எனவே சில நேரங்களில் வளைந்து நெகிழ்ந்து சில காரியங்களை நாம் சாதிக்க வேண்டி இருக்கும்.

?ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமையாக இருந்தால் நல்லது?
– சு.மணிகண்டன், ரஜபாளையம்.

என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். வேறு எந்த கிரகம் வலிமையோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், சந்திரன் வலிமையோடு இருக்க வேண்டும். காரணம், சந்திரன் மன ஆற்றலைக் குறிக்கிறது. உங்களை வீழ்த்துகின்ற முதல் காரணி உங்கள் மனம் பலவீனமடைவதுதான். உங்கள் தெளிவைக் குறைப்பதும், குழப்புவதும், மயங்கவைப்பதும் மனம்தான். ‘‘மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் என்னும் மைந்தன் தோன்றித்தூய நல்லறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்’’ என்பார் வில்லிபுத் தூராழ்வார். உங்கள் மனதைக் கலைத்துவிட்டால் அல்லது கலைந்துவிட்டால் எல்லாம் போய்விட்டது என்று அர்த்தம். தெளிவும் மனவலிமையும் குறிக்கும் குறியீடுதான் சந்திரன். சந்திரன் பலவீனமாக இருப்பவர்கள் எப்பொழுதும் குழப்பமான மனநிலையிலும், எடுப்பார் கைப் பிள்ளையாகவும், வைராக்கியம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

‘‘பிறந்ததிலிருந்து என் ராசி சரியில்லை என்று ஒருவர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருடைய ஜாதகத்தில் சந்திரன் பல
வீனம் என்று அர்த்தம். அந்தச் சந்திரனை பலப்படுத்த வேண்டும். மனதை பலப்படுத்த வேண்டும். தெளிவாக்க வேண்டும். அதற்கான ஒரு வழிதான் ஆலயம், தியானம், வழிபாடு எல்லாம்.

?பக்தி, கோயில், வழிபாடு விரதங்கள் இவைகளெல்லாம் நம் பிரச்னையைத் தீர்க்குமா?
– வெங்கடேஷ், திருச்சி.

பிரச்னையை தீர்க்கும் என்பதைவிட, தீர்க்கும் வழியைக் காட்டும் என்றுசொல்வதே சரியாக இருக்கும். தியானமும், பக்தியும் கதவை திறந்து வெளிச்சம் காட்டும் அதற்குப் பிறகு மேலே போவது நம் பொறுப்பு.

?ஏன் வருத்தப்படுகிறோம்?
– மதுமிதா, கோவை.

வருத்தப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நினைத்தது நடக்கவில்லையே என்று வருந்துவார்கள். இல்லாவிட்டால் நடந்து போனதையே நினைத்து வருந்துவார்கள். இதைத்தான் கவியரசு கண்ணதாசன், “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை” என்று பாடினார். எத்தனை அற்புதமான தத்துவத்தை இரண்டு வரிகளிலே சொல்லிவிட்டார்.

?பிரம்ம முகூர்த்தத்தின் முக்கியத்துவம் என்ன?
– வரதராஜ், தேனி.

பெரியவர்கள் திரும்பத் திரும்ப சொல்லுகின்ற ஒரு விஷயம் பிரம்ம முகூர்த்தம். அது மகத்தானது. நமக்கு அளிக்கப்பட்ட கொடை என்று சொல்லலாம். விடியல் காலை நாலு முப்பது முதல் ஆறு மணி என்று வைத்துக்கொள்ளுங்கள். உறங்கும் உயிர்கள் உறக்கம் கலைந்து விழிக்கும் நேரம். ARISE, AWAKE என்றார் விவேகானந்தர். விழிப்பு என்பது நம்மை நாமே உணர்கின்ற நேரம். மறுபடியும் பிறக்கின்ற நேரம். உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்றார் வள்ளுவர். உறங்கி விழிப்பது என்பது மறுபிறப்பு போல என்பது திருவள்ளுவர் சொல்லுகின்ற உவமை. அந்த மறுபிறப்பு நேரம்தான் விடியல் நேரம். நாம் இரவில் தூங்கிவிட்டால், மறுபடி எழுந்தால்தான் வாழ்வு . அந்த விழிப்பு வந்துவிட்டால் அடுத்த நாள் இருக்கிறோம் என்று பொருள்.

அந்த விழிப்பைக் கொடுக்கக்கூடிய நேரம் என்பது பிரம்ம முகூர்த்தம். பிரம்ம முகூர்த்தம், நேர்மறையான நேரம், உற்பத்திக்கான நேரம். படைப்புக்கான நேரம் என்பதால், படைப்புக் கடவுளான பிரம்மனின் பெயரில் பிரம்ம முகூர்த்தம் நேரம் என்று சொல்கின்றோம். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், காலை 10 மணி முதல் 12 மணி வரை, 2 மணி நேரம் எவ்வளவு வேலை ஆகிறது என்று பாருங்கள். அதே வேலை காலை நாலு மணி முதல் ஆறு மணி வரை எவ்வளவு ஆகிறது என்று பாருங்கள். மிக அதிகமான வேலையை காலை 2 மணி நேரத்திற்குள் நாம் செய்துவிட முடியும். எனவேதான் ஒரு முயற்சியை, வழிபாட்டை, ஒரு செயலின் தொடக்கத்தை, பிரம்ம முகூர்த்தத்தில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

சாஸ்திர ரீதியாக பிரம்ம முகூர்த்தத்தில் செய்யக்கூடிய வேலைகளுக்கு எந்த தோஷமும் கிடையாது. திதி தோஷம், வார தோஷம், நட்சத்திர தோஷம் என எதுவும் கிடையாது. அது சுபவேளை. விடிந்தது என்றால் ‘‘நம் வாழ்க்கை விடிந்தது’’ என்று அர்த்தம்.

?நம் முகம் எல்லோருக்கும் பிடிக்க என்ன செய்ய வேண்டும்?
– சி.ராஜ ராஜன், பெங்களூர்.

ஒன்றும் செய்ய வேண்டாம். அது இருப்பது போல் இருக்கட்டும். கடைகளில் விற்கின்ற கூடிய அழகு சாதனங்களைப் பயன்படுத்தி இன்னும் மோசம் ஆக்கிக் கொள்ள வேண்டாம். அகத்தின் அழகு என்பதுதான் முகத்தில் தெரியும். உங்களுடைய அகமாகிய மனம் சந்தோஷமாக இருந்தால், அது முகத்தில் பிரதிபலித்து ஒளியைக் கூட்டி அழகைத் தரும். பிறரிடம் கடுகடு என்று இருந்தால் முகத்தில் சுருக்கம் விழுந்து, நன்றாக இருந்தாலும் கெட்டுவிடும்.

எத்தனை கஷ்டம் வந்தாலும் பிறர் பேசுவதைக் கேளுங்கள். மலர்ச்சியோடு இருங்கள். மனம் விரிந்தால் இதழ் விரியும். இதழ் விரிந்தால் எண்ணங்கள் பலிக்கும். எண்ணங்கள் பலித்தால் வாழ்வு சிறக்கும். கண்ணாடி முன் சிரித்தபடி நில்லுங்கள். உங்கள் முகம் உங்களுக்குப் பிடிக்கும். உங்கள் நடத்தையால் எல்லோரையும் சிரிக்க வையுங்கள். உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும். Fair and lovely யால் வராத அழகு, பிறருடன் fair and lovely யாக பழகுவதால் வந்துவிடும்.

?எதைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் கிடுகிடு என்றுமுன்னேறலாம்?
– சிவசுப்ரமனியன், வேலுர்.

நான்கு “P’’ களை கடைபிடியுங்கள்.

1. எதைத் துவங்குவதற்கு முன்னாலும் பிரார்த்தனை செய்யுங்கள் (PRAYER).

2. எந்தச் செயல் செய்வதற்கு முன்னாலும் எதற்கு முதன்மை தருவது என்று யோசியுங்கள் (PRIORITY).

3. எதைச் செய்தாலும், இது நன்றாக நடக்கும் என்று நேர்மறை சிந்தனையோடு தொடங்குங்கள் (POSITIVITY).

4. எப்பொழுதும் அவசரப்படாதீர்கள். பதற்றப்படாதீர்கள். பொறுமையோடு இருங்கள் (PATIENCE).

இந்த நான்கையும் கடைபிடித்தால் தோல்வி என்பதே கிடையாது.

தேஜஸ்வி

The post தெளிவு பெறுஓம் appeared first on Dinakaran.

Related Stories: