புதுடெல்லி: ஜெய்ராம் ரமேஷ் எம்பி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: மகாத்மா காந்தியின் படுகொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் நேரு ஜனசங்கத்தின் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார். மகாத்மா கொலைக்கு பின்னர் 1948 ஜூலை 18 ம் தேதி சர்தார் வல்லபாய் படேலும் சியாமா பிரசாத்துக்கு கடிதம் எழுதினார். அதில், ஆர்எஸ்எஸ்,இந்து மகாசபையை கண்டித்தும் அவற்றின் நடவடிக்கைகளை விமர்சித்தும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
காந்தி ஒரு தடையாக இருந்தார் என்றும் அவர் விரைவில் இறந்தால் அது நாட்டிற்கு நல்லது என்றும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆர்எஸ்எஸ் இன்னும் மோசமாக நடந்து கொண்டது. அதன் மிகவும் ஆட்சேபனைக்குரிய நடவடிக்கைகள் குறித்து பல தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம் என்று நேரு தனது கடிதத்தில் எழுதியுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். சியாமா பிரசாத்துக்கு சர்தார் படேல் எழுதிய கடிதத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் ஜெய்ராம் பகிர்ந்துள்ளார்.
