மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகாமல் இங்கே வந்தது ஏன்? மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் பெற்றுவிட்டு யூடியூபர் சங்கர் ரீல்ஸ் வெளியிடுவதா? ஜாமீன் நிபந்தனையை எதிர்த்த மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: நிபந்தனைகளை கடைப்பிடிக்காமல் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் பெற்று யூடியூப்பில் பதிவுகளை போடுவதை ஏற்க முடியாது என்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றம் வந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் யூடியூபர் சங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சினிமா பெண் தயாரிப்பாளரை மிரட்டி ரூ.2 லட்சம் பறித்த வழக்கில் யூடியூபர் சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், தனது மகனுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை ரத்து செய்யக்கோரி யூடியூப்பர் சங்கரின் தாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் திபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மனுதாரருக்கு சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சரியான சிகிச்சை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி திபாங்கர் தத்தா, மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்துத்தான் இடைக்கால ஜாமீன் தரப்பட்டுள்ளது. இடைக்கால ஜாமீன் காலம் முழுவதும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

ஆனால், ஜாமீனில் வெளிவந்தவுடன் மனுதாரர் வீடியோ, ரீல்ஸ்களை பதிவிட்டு வந்துள்ளார். இது உயர் நீதிமன்றம் அவருக்கு தந்த உரிமையை துஷ்பிரயோகம் செய்வதாகும். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றம் வருவதா என்று கண்டனம் தெரிவித்தார். அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, விசாரணைக்காக மனுதாரரின் மொபைல் போன் தேவைப்படுகிறது. அந்த மொபைலை தராமல் அதை பயன்படுத்தியே யூடியூப்பில் பதிவுகளை போட்டுவருகிறார். அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை என்றார்.

இதைக்கேட்ட நீதிபதி சதீஷ் ஷர்மா, அவர் ரீல்ஸ் போன்றவற்றை பதிவிட்டு வெளியிடுகிறாரா? என்று கேட்டார். அதற்கு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், கடந்த டிசம்பர் 26ம் தேதி அவர் நிபந்தனை இடைக்கால ஜாமீனில் வெளிவந்தவுடன் டிசம்பர் 30ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி 2 வாரங்கள் கழித்து வருமாறு தெரிவித்துள்ளனர் என்று மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லவில்லை. மாறாக டாக்டர் காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஜனவரி 16ம் தேதிதான் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மறுநாள் மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளார்.

அவர் 15 நாட்கள் மருத்துவர்கள் ஆலோசனையை கடைபிடிக்க வேண்டும் என்றும் 5 நாட்கள் கழித்து இதய சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மனுதாரரின் மகன் இதை கடைபிடித்தாரா என்பதற்கான ஆவணங்கள் இல்லை. மனுதாரரின் மகனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் மனுதாரரின் மகன் சங்கர் அரசு மருத்துவ வாரியத்தில் ஆஜராகி மருத்துவ சான்றிதழ் பெற்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால், அவர் அரசு மருத்துவ வாரியத்திற்கு செல்ல விரும்பவில்லை. மாறாக யூடியூப்பில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என்றார்.

அதற்கு யூடியூபர் சங்கர் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அரசு மருத்துவ வாரியத்தில் ஆஜராவதில் அவருக்கு பயம் உள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதி திபாங்கர் தத்தா, அரசு மருத்துவர்களை எப்படி இழிவு படுத்தலாம் என்று கடுமையாக கேட்டார். அப்போது காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மனுதாரரின் மகனான யூடியூபர் சங்கரை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். அப்போது, யூடியூபர் தரப்பு வழக்கறிஞர், சங்கரின் ஏடிஎம் கார்டை காவல்துறையினர் வாங்கி கொண்டனர். அரசு மருத்துவர்களால் எதுவும் நடக்காது. இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். புதிய மனுவை தாக்கல் செய்யவுள்ளேன் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி யூடியூப்பர் சங்கருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

* உச்ச நீதிமன்றம் கருத்து
நீதிபதிகள் கூறுகையில், திரைப்பட தயாரிப்பாளரை தாக்கியது, மிரட்டிப் பணம் பறித்தது மாதிரி வலுவான குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் “உடல்நலம் சரியில்லை”ன்னு சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் மூன்று மாத இடைக்கால ஜாமீன் பெற்றுள்ளார். நீதிமன்றம் சிகிச்சை மட்டும் பெறலாம் வழக்கை கெடுக்கக் கூடாது. சாட்சியங்களை கலைக்கக் கூடாது. போலீஸுக்கு ஒத்துழைக்கணும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சங்கர் சிகிச்சை பெறாமல் மருத்துவமனைக்குப் போகாம ஸ்டுடியோக்குப் போயுள்ளார். தினமும் வீடியோ, ரீல்ஸ், லைவ் போடுகிறார். சக குற்றவாளிகளை மிரட்டுகிறார், செல்போனை ஒப்படைக்கவில்லை என்று போலீசார் மனு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது. சிகிச்சை எடுத்துக்காம ரீல்ஸ், வீடியோஸ் போடுறது, ஜாமீன் கொடுத்த நோக்கம் இல்ல உண்மையில் உடல்நிலை சரியில்லனா, கொஞ்ச நாள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: