சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் நடிகர் ஜெயராமிடம் எஸ்ஐடி 2 மணி நேரம் விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக பிரபல நடிகர் ஜெயராமிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அவரை சாட்சியாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்து இருக்கிறது. சென்னைக்கு தங்கத்தகடுகளை கொண்டு சென்ற ஸ்பான்சரான உண்ணிகிருஷ்ணன் போத்தி இந்த 2 வழக்குகளிலும் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

சபரிமலை தங்கத்தகடுகளை இவர் சென்னை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பல செல்வந்தர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு கொண்டு சென்று பூஜை நடத்தி லட்சக்கணக்கில் பணம் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்தும் பூஜை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஜெயராமும் உறுதி செய்தார். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழு திடீரென சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தியது.

அப்போது கடந்த 40 வருடங்களாக சபரிமலை செல்வதாகவும், அங்கு வைத்து உண்ணிகிருஷ்ணன் போத்தியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். சபரிமலையில் உள்ள தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்திருப்பதாகவும், அவற்றை வீட்டில் வைத்து பூஜை நடத்தினால் ஐஸ்வர்யம் பெருகும் என்றும் உண்ணிகிருஷ்ணன் போத்தி கூறியதால் பூஜை நடத்த சம்மதித்தேன் என்றும், அதற்காக அவருக்கு பணம் ஏதும் கொடுக்கவில்லை என்றும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஜெயராம் கூறியதாக தெரிகிறது. சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இந்த வழக்கில் நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: