பெங்களூரு: பெங்களூருவில் பிரபல தொழிலதிபர் சி.ஜே.ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சி.ஜே.ராய் பெங்களூருவில் கான்ஃபிடன்ட் குழுமம் என்ற பெயரில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். சில மலையாள திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார். இவர், ஸ்லோவாக் குடியரசு நாட்டின் கவுரவ துணை தூதராகவும் இருந்து வந்தார்.
பெங்களூரு ரிச்மண்ட் சாலையில் உள்ள இவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, பல ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக சி.ஜே.ராயிடம் அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் துருவி, துருவி கேள்விகள் கேட்டதாக தெரிகிறது. ஒரு புறம் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், தனது அறையில் இருந்த சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால் போலீசார் தரப்பில் தற்கொலை என்று உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. சி.ஜே.ராயின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்து, போலீசார் விசாரணையும் முடிந்தால் தான் மரணத்தின் பின்னணி குறித்த மற்ற விவரங்கள் தெரியவரும் என்றனர். சி.ஜே.ராய் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை உடனடியாக முடித்துக்கொண்டு அதுவரை கிடைத்த ஆவணங்களை 2 கார்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்.
