புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆசாத் பர்வேஸ் என்ற நபரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தை குறிப்பிட்டு கடந்த 2024ம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட ஆசாத் பர்வேஸ் நபரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆசாத் பர்வேசுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது. மேலும் உடனடியாக சரணடையவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் முறையாக செயல்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த வழக்கில் எட்டு சாட்சிகளை தற்போது வரை ஏன் விசாரிக்கவில்லை. வழக்கு விசாரணை தாமதமாவது ஏன்? அதற்கான காரணம் என்ன?
போதைப்பொருள் வழக்குகளில் விசாரணை அமைப்புகளுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிக்கும்போது அதன்மீது மேல்முறையீடு செய்யவும், அதனை ஒன்றிய அரசு கண்காணிக்கவும் பயனுள்ள வழிமுறைகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை தெளிவுப்படுத்துங்கள் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் மற்றும் கவுகாத்தி போதை பொருள் தடுப்பு பிரிவு ஐ.ஜி ஆகியோர் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
