தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு

*தஞ்சை கலெக்டர் பேரணியை தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர் : தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி சீட் பெல்ட் மற்றும் தலைகவசம் அணியும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதி அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நிகழ்ச்சியாக சீட் பெல்ட் மற்றும் தலைகவசம் அணியும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதி அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 1.1.2026 முதல் 31.1.2026 வரை நடைபெற்று வருகிறது.

சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 2026 முன்னிட்டு தலைக்கவசம் அணிவது மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானம் வரை நடத்தப்பட்டது.

இதில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனம், வாகன விற்பனையாளர்களின் வாகனங்கள், டாக்சி ஓட்டுநர் சங்க வாகனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் 350க்கும் மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் தலைகவசம், சீட்பெல்ட் அணிவதன் பயன்கள், நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஜனவரி 1 முதல் 31 வரை தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம், வருவாய் அலுவலர் தியாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, காவல் துறையினர். தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, கும்பகோணம் வட்டார போக்குவரத்து பணியாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர், வாகன விற்பனை முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: