கோவை அரசு மருத்துவமனையில் ரூ.9.65 கோடியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு

கோவை : கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.9.65 கோடி மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

மருத்துவமனைக்கு தினமும் புறநோயாளிகள் பிரிவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.287 கோடியே 56 லட்சத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய 6 மாடி புதிய உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை கட்டிடம் ஏற்படுத்தப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். ஒரு வார்டில் இருந்து நோயாளியை மற்றொரு வார்டிற்கு மாற்றும் போது இந்த சாலையில் அவர்களை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆம்புலன்ஸ் கூட சாலையை விரைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து பயன்படுத்த தகுதியில்லாத நிலையில் இருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள சாலையை சீரமைக்க அரசு சார்பில் ரூ.9.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து சாலைகள் சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் தற்போது 80 சதவீதம் அளவிற்கு முடிந்துள்ளது.

தற்போது, புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட சில இடங்களில் சாலைகள் போட வேண்டியுள்ளது. மேலும், முன்பு தார்சாலை இருந்த நிலையில், தற்போது சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு வருகிறது. இந்த சிமெண்ட் சாலைகள் நீண்ட காலம் பயன் தரும் எனவும், மழைநீர் எளிதில் வடியும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: