*சர்வீஸ் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படுமா?
தியாகராஜ நகர் : நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சர்வீஸ் சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவதிப்படும் மக்கள், சர்வீஸ் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படுமா? என எதிர்பார்க்கின்றனர்.நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதைத்தவிர்க்க புதிய புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதியில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா முறை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்னல் அகற்றப்பட்டு வாகனங்கள் தடையின்றி செல்கின்றன.
ஆனாலும் சில சாலைகளில் போக்குவரத்து தொடர்ந்து அதிகரிக்கிறது. வண்ணார்பேட்டை முதல் மார்க்கெட் சாலை மற்றும் திருவனந்தபுரம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காக ஏற்கனவே பாளையங்கோட்டை நேரு பூங்கா எதிரே துவங்கி தெற்கு பைபாஸ் சாலை- செல்ல பாண்டியன் மேம்பாலம் தொடங்கும் இடம் வரை சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநகராட்சி மேற்கொண்டது.
இதற்காக மாநகராட்சி சார்பில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தயார்படுத்தப்பட்டது. நேரு பூங்கா எதிரே உள்ள வாய்க்கால் பாலம் அகலப்படுத்தப்பட்டது. இந்தப் பகுதியில் நிலம் வைத்திருக்கும் பலர் சாலை விரிவாக்கத்திற்கு தாமாக முன்வந்து நிலம் கொடுக்க முன்வந்தனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கடந்த சுமார் 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இணைப்பு சாலை திட்டத்தை செயல்படுத்தினால் பாளையங்கோட்டை பஸ் நிலையம் பகுதிகளில் இருந்து இருந்து வண்ணார்பேட்டை பகுதிக்கு வருவதற்கு கூடுதலாக ஒரு சாலை வசதி கிடைக்கும். இதனால் தற்போது உள்ள திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாலை திட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன மண், குப்பை கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. பல இடங்களில் உள்ள கட்டிடக்கழிவுகளும் இங்கு நிரம்புகின்றன. மேலும் முள் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இரவு நேரங்களில் விஷமிகள் நடமாட்டமும் இப்பகுதியில் உள்ளது.
எனவே மாநகர போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த இணைப்பு சாலை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் மேலும் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் சீரமைப்பதுடன் இங்கு உள்ள வாய்க்கால் சாலையில் மின்விளக்கு வசதிகளையும் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
