குன்னூர் : தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு குன்னூரில் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.நீலகிரி மாவட்டத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த 1ம் தேதி தொடங்கி இம்மாதம் 31ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று குன்னூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து சிம்ஸ் பூங்கா முதல் குன்னூர் பேருந்து நிலையம் வரை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
குன்னூர் பேருந்து நிலையம் வந்தடைந்த பேரணி, ஹெல்மெட் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, செல்போன் பேசிய படி வாகனங்கள் இயக்குவது, போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் இருப்பது, இதனால், ஏற்படும் விபத்துகள் குறித்து மாணவ, மாணவிகள் தத்ரூபமாக நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியில் போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
