*வெம்மை ஆடை விற்பனை அதிகரிப்பு
ஊட்டி : நீலகிாி மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக காலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், ஊட்டியில் வெம்மை ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் உறைபனி பொழிவு துவங்கியது. அவ்வப்போது பனிபொழிவு குறைந்து காணப்பட்டாலும், பெரும்பாலான நாட்கள் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில், பனிமூட்டமான காலநிலை, பனி என மாறுபட்ட காலநிலைகள் நிலவி வருகிறது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், தலைக்குந்தா, கோரகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது.
பனி காரணமாக அதிகாலை, இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், காலை நேரத்தில் காய்கறி தோட்டம், தேயிலை தோட்டகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் காலை நேரங்களில் பனிமூட்டமான காலநிலை காணப்படுகிறது.
உறைபனியின் தாக்கம் காரணமாக தேயிலை செடிகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள புற்கள், செடி கொடிகள் கருக துவங்கியுள்ளன. குளிர் அதிகரித்த நிலையில் வெம்மை ஆடைகளான ஜர்க்கின், ஸ்வெட்டர், குல்லா போன்றவை கொண்டு வரப்பட்டு ஊட்டி நகரின் முக்கிய சாலையோரங்களில் ைவத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை பொதுமக்கள் அதிகளவு வாங்கி செல்கின்றனர்.
