தேன்கனிக்கோட்டை : கெலமங்கலம் அருகே, யூ.புரம் கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 500 காளைகள் பங்கேற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே யூ.புரம் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்ட்டி, சூளகிரி, உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளைகளின் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட தட்டிகளை கட்டி விட்டு ஓட விட்டனர்.
சீறிப்பாய்ந்த களைகளின் கொம்புகளில் கட்டியிருந்த தட்டிகளை இளைஞர்கள் போட்டி போட்டு பறித்தனர். இளைஞர்களின் கையில் சிக்காமல் காளைகள் சீறிப்பாய்ந்தன. எருதாட்ட விழாவை காண கெலமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
