அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்: உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொல்கத்தா : பாராமதி விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தேகத்தை கிளப்பியுள்ளார். அஜித் பவார் மரணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மம்தா வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் இன்று காலை நிகழ்ந்த கோர விமான விபத்தில், மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் உயிரிழந்தார். இன்று காலை சுமார் 8:45 மணியளவில் அவர் பயணித்த தனி விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

விமானம் தரைதொடும் முன்பே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த காலி மைதானத்தில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான சில நிமிடங்களிலேயே விமானம் தீப்பற்றி எரிந்ததால், மீட்புப் பணிகள் சவாலாக இருந்தன. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்ததை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இதையடுத்து அஜித் பவாரின் மறைவிற்கு பிரதமர், குடியரசு தலைவர், ஒன்றிய உள்துறை அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது; “பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார் என சில தினங்களுக்கு முன்பு அஜித் பவார் கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியினரின் நிலை என்ன? அஜித் பவார் மரணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: