புதுடெல்லி: வெளியூரில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க முடியுமா என்பது குறித்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 24 வயதான மாணவர் ஜெயசுதாகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வக்கீல் ஜோஸ் ஆபிரகாம் தாக்கல் செய்த அந்த மனுவில்,’ மாணவர் வாக்காளர்களுக்கு, குறிப்பாகத் தங்கள் சொந்தத் தொகுதிகளுக்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ வாக்காளர்களுக்கு, தபால் வாக்குப்பதிவு வசதியை நீட்டிக்கவும், அவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் ஒரு பயனுள்ள வழிமுறையை உருவாக்க வேண்டும். மாணவர்கள், வாக்குப்பதிவு நாளில் தங்கள் சொந்தத் தொகுதிகளுக்குப் பயணம் செய்வதில் ஏராளமான தடைகள் உள்ளன.
அவர்கள் வாக்களிக்க எந்தவொரு மாற்று வாக்குப்பதிவு முறையும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, தற்போதைய சட்டக் கட்டமைப்பு, அவர்கள் வாக்களிக்கும் அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்துவதைத் திறம்படத் தடுக்கிறது. இந்த புறக்கணிப்பு தன்னிச்சையானது. நாட்டுக்கான சேவை வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ளவர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவினருக்கு தபால் வாக்கு வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், மாணவர்களுக்கு இந்த வசதி இல்லை. எனவே தபால் வாக்குப்பதிவின் வரம்பை விரிவுபடுத்தி மாணவர்களையும் சேர்க்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதன் மூலம் இளம் வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் தேசத்தின் எதிர்காலத் தலைவர்களின் குரல்கள் ஒடுக்கப்படாமல், ஜனநாயகச் செயல்பாட்டில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்.
விடுப்பு இல்லாததாலோ அல்லது தபால் வாக்கு வசதி மறுக்கப்பட்டதாலோ மாணவர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்காததை உறுதிசெய்யும் விதிகளை இணைத்து, தேர்தல் நடத்தை விதிகள், 1961ல் வழிகாட்டுதல்களை வகுக்குமாறு அல்லது திருத்தங்களைச் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. பரமேஸ்வர்,’ தடுப்புக் காவலில் உள்ள ஒரு நபர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார், ஆனால் ஒரு மாணவர் வாக்காளர் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை’ என்று வாதிட்டார். இதை தொடர்ந்து வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்களிக்க வசதி ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எத்தனை பேர் உள்ளனர்?
* 2024 பிப்.8ஆம் தேதி தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி, நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 1.84 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் முதல்முறை வாக்களிக்கும் தகுதியுடைய மாணவர்கள்.
* 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் சுமார் 19.74 கோடி பேர் உள்ளனர். இவர்களில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளைப் படிக்கும் ஏராளமான கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவர்.
