புதுடெல்லி: கடந்த 2010-2014ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மின் உற்பத்தி தொழிற்சாலையில் நடந்த பணிக்காக சட்டவிரோதமாக சீன நாட்டை சேர்ந்த 263 பேர் இந்தியாவிற்கு அழைத்து வர விசா வழங்கும் நடைமுறையில் ரூ.50 லட்சம் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் லஞ்சமாக பெற்றதாக 2022ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதே விவகாரத்தில் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அப்போது சிபிஐ பதிவு செய்த வழக்கில் விசாரணை நடத்திய டெல்லி சிறப்பு நீதிமன்றம், விசா விவகாரம் தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதி வழங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் ஜெயின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சிபிஐ பதிலளிக்க நீதிபதி நோட்டீஸ் பிறப்பித்தார்.
