புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் 2ம் தேதி வரை 2 கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு பதிலாக அண்மையில் கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி திட்ட பெயர் மாற்றம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்ப இந்தியா கூட்டணியினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறையில் நேற்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுசெயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், திமுக எம்பி டி.ஆர்.பாலு, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த், சமாஜ்வாடி கட்சியின் ஜாவேத் அலிகான், ஆர்ஜேடி கட்சியின் பிரேம்சந்த் குப்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், ஆர்எஸ்பியின் என்.கே.பிரேமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
