புதுடெல்லி: ‘‘வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான உறுதிப்பாடு, தேச பாதுகாப்பு, சுதேசி பிரசாரம் போன்ற தேச நலன் சார்ந்த விஷயங்கள் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. இது போன்ற விஷயங்களில் காந்தி, நேரு, வாஜ்பாய் போன்ற தலைவர்களை பின்பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுடன் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’’ என நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற மரபுகளின்படி, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அதன்படி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது:
இந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளில் நமது தேசம் ஏராளமான வெற்றிகள், புகழ்பெற்ற சாதனைகள் மற்றும் அசாதாரண அனுபவங்களை பெற்றுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், ஒவ்வொரு துறையின் அடித்தளமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது, 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய இலக்கிற்கான பயணத்தை வேகப்படுத்தி உள்ளது.
* எனது அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளில் வறுமையிலிருந்து 25 கோடி மக்களை மீட்டுள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளில், ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
* ஜல் ஜீவன் திட்டத்தின் 5 ஆண்டுகளில், 12.5 கோடி புதிய வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
* உஜ்வாலா யோஜனா மூலம், இன்றுவரை, 10 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* கடந்த ஓராண்டில், நேரடி பணப் பரிமாற்றம் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக ரூ.6.75 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள நன்மைகளை எனது அரசாங்கம் வழங்கியுள்ளது.
* எனது அரசாங்கம் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஒதுக்கப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தினர் என அனைத்து தரப்பினருக்குமானதாக செயல்படுகிறது. இதன் மூலம் இன்று சுமார் 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பைப் பெறுகின்றனர்.
* ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ், கடந்த ஆண்டு வரை நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
* ஒவ்வொரு குடிமகனுக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிராத் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்களின் கீழ், ரூ.24 ஆயிரம் கோடிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டில், இந்தியா 350 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
* 150 மில்லியன் டன் உற்பத்தி மூலம், இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளது.
* நமது நாடு உலக அளவில் 2வது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாகவும் மாறியுள்ளது.
* பால் உற்பத்தித் துறையிலும், இந்தியா உலகின் மிகவும் வெற்றிகரமான நாடாக அறியப்படுகிறது.
* மொபைல் உற்பத்தி போன்ற துறையில், இந்தியா இப்போது உலகின் 2வது பெரிய நாடாக மாறியுள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 1 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது. இந்த ஆண்டு, இந்தியா 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
* ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத ஒரு அமைப்பை உருவாக்குவதில் எனது அரசாங்கம் வெற்றி பெற்று வருகிறது.
* கடந்த ஓராண்டில், இந்தியா சுமார் 18 ஆயிரம் கிலோமீட்டர் புதிய கிராமப்புறச் சாலைகளை அமைத்துள்ளது. இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகை கிட்டத்தட்ட முழுவதுமாகச் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.
* ரயில்வே, 100% மின்மயமாக்கல் இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.
* ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலத்தையும், தமிழ்நாட்டில் புதிய பாம்பன் பாலத்தையும் கட்டி, உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா ஒரு வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.
* இன்று, ஜம்மு காஷ்மீர் முதல் கேரளா வரை, 150-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
* 2025-ல், இந்தியாவின் மொத்த மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஆயிரம் கிலோமீட்டர் என்ற வரலாற்றுச் சாதனையைத் தாண்டியுள்ளது. இது உலகின் 3வது பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்.
* இந்தியாவின் இளம் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றது வரலாற்றுப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ககன்யான் திட்டத்திலும் தேசம் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறது.
* கடந்த 11 ஆண்டுகளில், பல்வேறு உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இந்தியா உலகின் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாகத் திகழ்கிறது. இது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கிறது.
* ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததற்கு அனைத்து மக்களையும் நான் வாழ்த்துகிறேன். இது இந்தியாவில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டிற்காக, விபி ஜி ராம் ஜி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் கிராமங்களில் 125 நாட்கள் உத்தரவாதமான வேலைவாய்ப்பை உறுதி செய்யும். அதே நேரத்தில், ஊழல் மற்றும் கசிவுகளை நிறுத்துவதை இது உறுதி செய்யும். இந்தத் திட்டம் கிராமப்புற வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் பராக்கிரமத்தை உலகம் கண்டது. நமது சொந்த வளங்களைப் பயன்படுத்தி நமது நாடு பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்தியாவின் மீது எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் உறுதியான மற்றும் தீர்க்கமான பதில் கிடைக்கும் என்ற வலுவான செய்தியை எனது அரசாங்கம் அனுப்பியது.
மாவோயிச பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படுவதை நாடு காணும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலக முதலீடு மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா சுமார் 750 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், சர்தார் படேல், லோஹியாஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் ஆகியோர் ‘ஜனநாயகத்தில் பிரச்னைகள் குறித்த கருத்து வேறுபாடுகள் இயல்பானவை, ஆனால் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட சில விஷயங்கள் உள்ளன’ என்ற நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டனர்.
எனவே, வளர்ந்த இந்தியா, பாதுகாப்பு, தற்சார்பு, சுதேசி இயக்கம், தேசிய ஒற்றுமைக்கான முயற்சிகள், தூய்மை இதுபோன்ற அனைத்து விஷயங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை. இதுவே நமது அரசியலமைப்பின் சாராம்சம். எனவே, தேசத்தின் வளர்ச்சியில் பங்கேற்பவர்களாக, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து, இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் புதிய ஆற்றலை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இன்று, இந்தியா முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. இன்று எடுக்கப்படும் முடிவுகளின் தாக்கம் வரும் ஆண்டுகளில் வெளிப்படும். நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டை நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வெற்றிகரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். ஜனாதிபதி உரையில் விபி-ஜி ராம் ஜி சட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
* சம்பிரதாய வார்த்தைகள் போலி வாக்குறுதி: காங்.
ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘ஏழைகளுக்கு எதிரான, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மோடி அரசாங்கம், வேலை செய்வதற்கான உரிமையை உறுதி செய்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை இரக்கமின்றி சிதைத்து, கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. ஏழைகளின் வாழ்வாதாரம் மறுக்கப்படும் இது என்ன வகையான வளர்ச்சி அடைந்த இந்தியா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், ‘‘உரையில் ஒன்றும் இல்லை. ஏற்கனவே அவர்கள் செய்ததாக கூறிய விஷயங்களின் மறுபதிப்பு மட்டுமே. முற்றிலும் போலியான உரை. போலி வாக்குறுதிகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன’’ என்றார்.
காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறுகையில், ‘‘சலிப்பூட்டும் உரையாக இருந்தது. எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் இல்லை. விபி-ஜி ராம் ஜி சட்டம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன’’ என்றார்.
* வளர்ச்சி பயணத்தை பிரதிபலிக்கிறது: மோடி
ஜனாதிபதி உரை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஜனாதிபதியின் உரை தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வழிகாட்டுவதோடு, கூட்டுத் தீர்மானத்தையும் எடுத்துரைக்கிறது. இன்றைய உரை விரிவானதாகவும் நுண்ணறிவு மிக்கதாகவும் இருந்தது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தைப் பிரதிபலிப்பதுடன், எதிர்காலத்திற்கான ஒரு தெளிவான திசையையும் காட்டியது’’ என்றார்.
