போர்க்கொடி தூக்கும் அதிமுக: அரியலூர் தான் வேணும் அடம்பிடிக்கும் தமாகா

அரியலூர்: அரியலூர் தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என தமாகா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் கூட்டணிக்கு அரியலூர் தொகுதியை ஒதுக்க கூடாது என அதிமுகவினர் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ, அன்புமணி (பாமக), தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு தங்களுக்கு விருப்பமான தொகுதிகளை அமமுக, பாமக (அ), தமாகா உள்ளிட்ட கட்சிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் எந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் இழுபறி நீடித்து வருகிறதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரியலூர் தொகுதியில் தமாகா போட்டியிட முடிவு செய்து, வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. தகவல் அறிந்த அதிமுகவினர் அரியலூரை கூட்டணிக்கு ஒதுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்களாம். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில்,‘‘அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை ராஜேந்திரன், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து வேலைகளையும், பல மாதங்களாக பார்த்து வருகிறார். ஒருவேளை தாமரை ராஜேந்திரனுக்கு சீட் கிடைக்காவிட்டால், உறவினர் ஒருவரை களத்தில் இறக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். ஆனால், திடீரென கூட்டணியில் உள்ள தமாகா அரியலூரை கேட்டு அடம்பிடித்து வருகிறது. இது சம்பந்தமாக அதிமுக தலைமைக்கு, அரியலூர் அதிமுக நிர்வாகிகள், தமாகாவிற்கு கண்டிப்பாக அரியலூரை கொடுக்க கூடாது என திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிமுக நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி, தமாகாவிற்கு சீட் கொடுக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை தமாகா, பாஜவின் ஆதரவு மூலம் அரியலூரில் போட்டியிட சீட் வாங்கி விட்டால் தேர்தல் நேரத்தில் தங்களின் வேலையை அதிமுகவினர் தீவிரமாக காட்டுவார்கள். இதனால் சீட் விஷயத்தில் அதிமுக தலைமையும் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது. எக்காரணத்தை கொண்டும் அரியலூரை விட்டு கொடுக்க கூடாது என்பதில் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக உள்ளார்கள்’’என்றனர்.

Related Stories: