மதுரை மதுரையில் விஜயின் தவெக கட்சிக்கு எதிராக களமிறங்க ரஜினி ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பிரதான கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகளிடையே தேர்தல் தொடர்பாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன. எனினும் புதிதாக தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில், தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் பட தணிக்கை வழக்கு, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணை ஆகியவற்றால் கடந்த ஒரு மாதமாக மவுனம் காத்து வந்த விஜய், சமீபத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் இதனை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். விஜய்யின் நிலைப்பாட்டையடுத்து அவருக்கு எதிராக களம் இறங்க ரஜினி ரசிகர்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்ற துணை செயலாளர் அழகர்சாமி கூறியதாவது: விஜய்யின் ஆரம்பகால சினிமா பயணத்தில் அவர், விஜயகாந்த் உடன் செந்தூர பாண்டி படத்தில் நடித்து தன்னை அவரின் தம்பியாக காட்டிக் கொண்டார். பின், ரஜினி ரசிகராக காட்டிக் கொள்வதற்காக, புதிய கீதை திரைப்படத்தில் ‘அண்ணாமலை தம்பி இங்கே ஆடவந்தேன்டா’ என, ரஜினி படத்தை மையமாக வைத்து பாடலே வைத்தார். எனினும், அவர் விஜயகாந்திற்கும் உண்மையாக இருந்ததில்லை. ரஜினிக்கும் உண்மையாக இருந்ததில்லை. தற்போதும் கூட அவரது மகன் சண்முகபாண்டியனின் திரையுலக வளர்ச்சிக்கு விஜய் தரப்பிலிருந்து எந்தவொரு உதவியும் செய்யவில்லை.
இது ஒருபுறமிருந்தாலும், ரஜினியின் பாபா திரைப்படம் தோல்வியடைந்தபோது, அதற்கு திரையுலகத்தினருக்கு மறைமுகமாக பார்ட்டி வைத்து கொண்டாடினார். 2005ல் சந்திரமுகி திரைப்படத்திற்கு எதிராக சச்சின் படத்தை போட்டியாக வெளியிட்டார். இவ்வாறு, பல நிகழ்வுகளில் ரஜினிக்கு எதிராக விஜய் செயல்பட்டு வந்ததை அனைவரும் அறிவர். சமீபத்தில் கூட கடந்தாண்டு அவரின் பிறந்தநாளுக்கும், 50 ஆண்டு சினிமா பயணத்திற்கும் விஜய் தரப்பிலிருந்து ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கப்படவில்லை.
2020, டிச.28ல் ரஜினி ரசிகர் மன்றத்தில் உள்ள மாணவரணி, வழக்கறிஞரணி என, உட்பிரிவுகள் கலைக்கப்பட்டாலும் தாய் கழகமான ரசிகர் மன்றம் கலைக்கப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு ஒரு தலைமை நற்பணி மன்றமும், பதிவு பெற்ற மற்றும் பெறாதது என, மாவட்டத்திற்கு குறைந்தது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளை மன்றங்களும் செயல்படுகின்றன. அவற்றின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இன்று வரை ரஜினியின் படம் வெளியாகும்போதும், அவரின் பிறந்தநாளுக்கும் ரத்ததானம், அன்னதானம் செய்வது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கென கணிசமான வாக்கு வங்கியும் உள்ளது. அதற்கு கடந்தாண்டு கூலி படம் வெளியானபோது கிடைத்த ரசிகர்களின் ஆதரவே சாட்சி. ரசிகர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ரஜினி, தலைவராகவும் தாயாகவும் குடியிருந்து வருகிறார். அவரை புறந்தள்ளியும், அவருக்கான உரிய மரியாதையையும் கொடுக்க தவறிய விஜய்க்கும், அவரின் கட்சியினருக்கும் எங்களின் ஓட்டுக்கள் நிச்சயம் விழாது. ‘தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்’ என்பதை போல், எங்கள் தலைவரை போலவே எங்களின் செயல்பாடுகளும் இருக்கும். வரும் தேர்தலில் விஜய்யை வீழ்த்தி அதை, நிரூபித்து காட்டுவோம். இவ்வாறு கூறினார்.
